Loading

Tuesday, March 27, 2012

துக்ளக் சத்யாவின் கட்டுரை ஒன்று !

இந்த வார துக்ளக்கில் ,சத்யா எழுதிய அரசியல் கட்டுரையிலிருந்து ..


வழக்கமாக் வீர வசனங்களை மட்டுமே பேசி தொண்டர்களை
மகிழ்விக்கும் திமுக தலைவர் ,சங்கரன் கோவில்
இடைத்தேர்தல் பிரசாரத்தில் விபரீத வசனம் பேசியிருப்பது
வேண்டாத விளைவுகளுக்கு வழிகாட்டி விடுமோ என்ற கவலையை
ஏற்படுத்துகிறது .

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்றினால் ,அந்த நாள் கருணாநிதி தீக்குளிக்கும் நாளாக
இருக்கும்  என்று எச்சரித்திருக்கிறார் அவர் .அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே ,
முதல் களப்பலியாகத் தயார் " என்று எண்ணற்ற முறை எச்சரித்து ,ஏராளமான
களப்பலிகளை அவர் தன் பொதுவாழ்வில் பார்த்து விட்டார் ,அத்தோடு  நிறுத்திகொள்ளக்கூடாதா ?
இதென்ன புதிதாக தீக்குளிப்பு எச்சரிக்கை ? இதுதான் அண்ணா காட்டிய வழியா ?

நூலகமோ  ,மருத்துவமனையோ எது எங்கிருந்தாலும்
அதனால் மக்களுக்கு பயன்தான் விளையப் போகிறதே தவிர ,கெடுதல்
எதுவும் விளைந்து விடப் போவதில்லை எனும்போது ,கலைஞர்
இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட இதில் என்ன இருக்கிறது என்று நமக்கு புரியவில்லை .

இலங்கையில் தமிழர்களை அந்நாட்டு ராணுவம் கொன்று குவித்துக் கொண்டிருந்ததாக
குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் கூட ,அரைகுறையாகவாது உண்ணாவிரதம் என்ற சாத்வீகமான
வழியைக் கடைப்பிடித்தாரே தவிர ,மத்திய அரசே ,இலங்கை பிரச்சினையில் தலையிடாவிட்டால்
தீக்குளிப்பேன் என்று அவர் எச்சரிக்கவில்லை .

இலங்கை வீடியோ காட்சிகளை பார்த்தபோது (அவரே கூறியபடி ) கண்களில் கண்ணீர் இடைவிடாமல்
வழிந்துகொண்டிருந்ததே தவிர ,தீக்குளித்து விடுகிறேன் பார் என்று அவர் பொங்கியெழவில்லை .
இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் ,மறைத்து வைக்கப்பட்டுள்ள 25 லட்சம் கோடி ரூபாய் கருப்புபணத்தை
மீட்க ,மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ,பணத்தை மீட்காவிட்டால் நான் தீக்குளித்து விடுவேன்
என்று அவேசப்படவில்லை .

நாடு முழுவதும் லட்சக்ணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதோ,நாட்டில் பாதுகாப்பு வசதிகள் இன்றி
பல லட்சம் டன் உணவுப்பொருட்கள்  மக்கிப்போவதோ , வேலை வாய்ப்பின்றி ,லட்சக்கணக்கான இளைஞர்கள்
பரிதவித்து கொண்டிருப்பதோ ,கருணாநிதியை இந்த அளவுக்கு பாதித்ததாக தெரியவில்லை .

இவற்றுக்காக கூட யாரும் தீக்குளித்து விட வேண்டும் என்று நாம் கூறவில்லை .ஆனால் இப்படியொரு உருப்படியான
காரணம் கூட இல்லாமல் ,"நூலகத்தை இடம் மாற்றினால் தீக்குளிப்பேன்"  என்று சவால் விடுவது ஒரு தலைவருக்கு அழகா ?

ஹிந்தி எதிர்ப்பு என்று முன்பு வீர வசனம் பேசி ,பல இளைஞர்களை காவு கொடுத்து தியாகி ஆக்கியது போதாதா ?
அப்படியொரு வரலாறு திரும்பவும் வேண்டுமா ? தலைவரே தீக்குளிப்புக்குத் தயார் என்றால் ,தொண்டர்களுக்கும்
அந்த வீர வியாதி தொற்றிக் கொண்டு விடாதா ?

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகும் ,கொள்கை முடிவு என்று அடம்பிடித்து
நூலக இடத்தை மாற்றினால் ,தீக்குளிப்பேன் என்கிறார் அவர் .சுப்ரீம்கோர்ட் நூலகத்தை மாற்றக்கூடாது என்று தீர்ப்பு வழங்கினால்
தமிழக அரசு அதை ஏற்றாக வேண்டும் .ஏற்க மறுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு
நடவடிக்கைக்கு உரியதாகும் .இடையில் தீக்குளிப்புக்கு என்ன அவசியம் இருக்கிறது ?
வழக்கு கோர்ட்டில் இருக்கும்போதே ,தீக்குளிக்க நேரிடும் -என்பது கோர்ட்டை மிரட்டுவது போலல்லாவா இருக்கிறது ?எதற்காக வெத்து
வீராப்பு ?

ஆனாலும் ,நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது .அப்படியே கலைஞர்
இதற்காக தீக்குளிக்கிற சூழ்நிலை உருவானாலும் கூட ,அதை எப்படி சமாளிப்பது என்று அவருக்குத் தெரியும் .
இலங்கை பிரச்சினைக்காக சாகும் வரை ,அரைநாள் அடையாள  உண்ணாவிரதம் இருந்து ,இலங்கை போர் நின்றுவிட்டது
என்று அறிவித்த மாதிரி , அடையாள தீக்குளிப்பாக கொஞ்ச நேரம் சுட்டெரிக்கும் காலை வெயிலில் நின்றுவிட்டு
,பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று அறிவித்து விட வாய்ப்பு இருக்கிறது .

அல்லது அந்தக்காலத்தில் ,"அரசியல் சட்டம் " என்று துண்டுச் சீட்டில் எழுதி கொளுத்தியது போல் ,தன் பெயரை ஒரு
பேப்பரில் எழுதிக் கொளுத்திவிட்டால் போதும் .எனவே அவரது தொண்டர்களுக்கு எந்த ஆபத்தும் வராது .கவலை வேண்டாம் !

2 comments:

  1. Awsome writing and analysis...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்