Loading

Tuesday, February 28, 2012

ரோஜா (காதல் கவிதை )




இந்த ரோஜாவை வாங்குபவள்
எந்த மகராசியோ என
என் உள்மனதில்
எண்ணங்கள் எகிறிக்கொண்டிருக்கின்றன ,

எவளும் வாங்கமாட்டாள் என '
எகத்தாளப் பார்வையுடன்
சில காதலன்கள் கிளம்புகிறார்கள்
காதலிகளை இழுத்துக்கொண்டே

மாலை வரத்தொடங்கிய
வேளையில்தான் புரிந்தது
இந்த வருடமும் .
காதலி கிடைப்பதற்கில்லையென,


இப்பொழுது நினைக்கிறேன்
அம்மாவின் தலையில் வைத்து
அழகு பார்த்திருக்கலாம்
இந்த ரோஜாவை ...





ஐந்து வருடத்திற்கு முன் ,ஒரு இனிய காதலர் தினத்தன்று
எழுதியது இந்த  கவிதை .


Saturday, February 25, 2012

அகவை 64ன் சாதனைகள்



சமீபத்தில் தெருமுனையில் ஒரு போஸ்டரை பார்க்க  முடிந்தது .

திமுக ரவுடிகள் மற்றும் அயோக்கியர்களை விரட்டியடித்த ஜெயலலிதாவின்(அம்மாவின் )பிறந்தநாள்
மற்றும் அரசின் சாதனை கூட்டம் நடைபெறுகிறது என்ற வாக்கியங்களை காண முடிந்தது .

திமுக ரவுடிகள்? -நேரடியாக திமுகவின் ஊழல் பேர்வழிகளை குறிக்கிறது என்று யூகிக்க முடிகிறது .

ஆனால் இந்த அயோக்கியர்கள் என்ற வார்த்தை யாரை குறிக்கிறது என்று பார்த்தோமானால் ,
ஒரு பெரிய பட்டியலே நியாபகத்திற்கு வருகிறது .
முதலில்
1) நடராஜன்
2) சசிகலா
3) திவாகரன்
4) சுதாகரன்
5) ராவணன்
6) மகாதேவன்
7) தினகரன்
என்ற பல அயோக்கியர்களை விரட்டியடித்த ஜெயலலிதா என்ற அர்த்தத்தை தெளிவாகவே குறிக்கிறது .






பொதுவாக பார்த்தால் ,சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ,முறைகேடாக பல விசயங்களை செய்தே பிழைத்து 
வந்திருக்கிறார்கள் என்ற உண்மை அனைவரும் அறிந்ததே .ஆனால் இந்த அயோக்கியத்தனங்களை ,அயோக்கியப் பேர்வழிகளை 
தன்னுடனே வைத்துக்கொண்டு ,ஊக்குவித்த செல்வி ஜெயலலிதா அவர்கள் இவற்றில் எந்த பட்டியலில் வருகிறார் ?

ஊழல்வாதி ,அயோக்கியத்தனங்களின் மொத்த உருவமாக இருந்துகொண்டு ,என்னை இதுநாள் வரை ஏமாற்றி விட்டார்கள் என்ற 
வாதத்தை முன்வைப்பது ,நடைமுறை உண்மையை பார்த்தால் சுத்தமாக அடிபட்டுப் போகிறது .அயோக்கியத்தனத்தின் ராணியாக தானே 
இருந்துகொண்டு ,அயோக்கியர்களை விரட்டியடிப்பது என்பது ,தொழில் போட்டியே அன்றி ,மக்கள் மீதுள்ள நல்லெண்ணத்தால் இல்லை என்பது 
தெள்ளத் தெளிவாக அனைவரும் அறிந்ததே .

மற்றொரு வார்த்தையை கவனியுங்கள் ,அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் என்று அச்சில் ஏற்றியிருக்கிறார்கள்.
ஆட்சிக்கு வந்த எட்டு மாதத்தில் என்ன விதமான சாதனை நிகழ்த்தினார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் .
பொழுதெல்லாம் மின்வெட்டு இவர்களின் அசைக்க முடியாதை சாதனை என்பது மக்களுக்குத் தெரிகிறது .மற்றொன்று 
விலைவாசியோடு சேர்த்து ,ஜெயலலிதாவின் அதிகாரப்போக்கு ,ஆணவப்போக்கும் ஏறியிருக்கிறது ,மக்களுக்கான சேவையை துளியளவும் 
செய்யாமல் ,வெற்று தம்பட்டம் அடித்துக்கொள்வதைபார்த்தால் உங்கள் கட்சிக்கும் ,திராவிட முனேற்ற கழகத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை என்பது 
தெரிகிறது .

இந்த சூழ்நிலையில் ,உங்கள் ஆஸ்தான அரசியல் ஆலோசகர் சோ .ராமசாமி சொன்னதுதான் நியாபகத்திற்கு வருகிறது .

"அயோக்கியர்களின் முதல் புகலிடம் அரசியல் "என்று ..

உங்களை பாராட்டும் அவரே ,நீங்கள் யார் என்று கூறிவிட்டார் .

Wednesday, February 22, 2012

IN TIME (2011)ஹாலிவுட் விமர்சனம்




இந்த திரைப்படத்தை பார்த்தபோது ,சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகமாயிடும்னு ,எழுத்தாளர் சுஜாதா சொன்னதுதான் நியாபகம் வருது .

சுத்தி வளைக்காம ,கதைய பார்த்துடலாம் ..

ஒவ்வொரு மனிதனுக்கும் ,25 வருஷம் மட்டுமே வாழ அனுமதிக்கப்படுகிறது .இந்த 25 வருட
கணக்கை ,ஓவ்வோருவரின் மனிக்கட்டிலும் சுட்டிகாட்டப்பட்டிருக்கும் .மேற்கொண்டு வாழ ஆசைபட்டால் ,வேலைகள் செய்தோ ,மற்றவர்களிடம்
கடன் வாங்கியோ உங்கள் வாழ்நாள் நேரத்தை கூட்டிக்கொள்ளலாம் .இப்படித்தான் ஹீரோவும்,அவனின் அம்மாவும் ,
வாழ்நாளை கூட்டிக்கொள்ள வேலை பார்க்கிறார்கள் ..

இதனிடையே 100 வருடத்திற்கு ஆயுளை வைத்திருக்கும் ஒருவனை ,வில்லன் கூட்டம் (மற்றவர்களின் நேரத்தை ,மிரட்டி
வாங்கிக்கொள்ளும் கூட்டம் ) பிடிக்க ,அவர்களிடமிருந்து ஹீரோ அவனை காப்பாற்றுகிறார். அதிர்ஷ்டவசமாக ,அந்த நூறு வருட ஆயுள்
நேரத்தையும் ஹீரோவிடமே கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்..,இப்போது ஹீரோவை அந்த வில்லன் கூட்டம் துரத்துகிறது.



ஹீரோவுக்கு கிடைத்த நூறு வருட ஆயுளில் ,சரிபாதியை அவரின் அம்மாவுக்கு கொடுக்க நினைக்கிறார்,ஆனால் துரதிஷ்டவசமாக் 
அவரின் அம்மா ,நேரமின்மை காரணமாக இறக்கிறார்.அதன்பிறகு ஹீரோ சீட்டாட்டத்தின் மூலம் மேலும் ஆயிரம் வருடங்களை 
பெற்றுக்கொள்கிறார் .இப்படிப்பட்ட நேரத்தில் ,வில்லன் படை ,ஹீரோவை பிடித்து ஆயிரம் வருட ஆயுளையும் பறித்துக்கொண்டு 
வெறும் ரெண்டுமணிநேரத்தை மட்டும் ஹீரோவுக்கு விட்டுச்செல்கிறார்கள் .அந்த நெருக்கடியான கட்டத்தில் இருந்தது ஹீரோ தன் ஆயுள் நேரத்தை மீட்டாரா  ?எதிரிகளை 
 பழிவாங்கினாரா ?இல்லையா ? என்பதை 
கொஞ்சம் சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார்கள் .

இந்த திரைக்கதையின் சுவாரஸ்யம் என்னவென்றால் ,25 வயதிற்கு மேல் யாருடைய வயதும் ஏறுவதில்லை ,வெறும் வருடக்கணக்கை
கையில் பார்த்துக்கொள்ளலாம். ஹீரோவும் 25வயது ,அவரின் அம்மாவும் 25 வயது தோற்றம் உடையவள்.இப்படி திரைப்படம் முழுக்க 
சில வினோத கற்பனைத்திறனை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் .சைன்ஸ் பிக்சன் கதையில் ,இந்த திரைப்படமும் ஒரு சுமார் ரகத்தை சேர்ந்த 
வித்தியாசமான படம் .ஒருமுறை பார்க்கலாம் .


Sunday, February 12, 2012

க்க்க்க்காதல் கதை

கட்டுரை .காமில் வெளிவந்த எனது சிறுகதை .


சரவணனுக்கு காதல் என்றாலே ஆகாது ,பக்கத்து வீட்டு பிள்ளைகளிடம் கூட ,பேசமாட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் ,என்று சரவணனின் அம்மா ,வந்திருந்த விருந்தினர்களிடம் சரவணபுராணம் பாடிக்கொண்டிருந்தாள் .உண்மையில் சரவணன் அப்படிப்பட்டவனா?
வாருங்கள் சரவணனின் வாழ்க்கையை, அவனுடைய அம்மாவை தவிர்த்து விட்டு பார்ப்போம் .
காதல் செய்யாவிட்டால், பிறந்ததே வேஸ்ட் என்ற சினிமாக்காரர்களின் திரைப்பட வசனங்களை கேட்டு வளர்ந்த சரவணன் , அதன்படியே முதல் காதல்களை செய்யத் தொடங்கினான் .அதென்ன ’முதல் காதல்கள்’ என்று நீங்கள் கேட்கவருவது புரிகிறது.
பிற்பகுதியில் சரவனனே உங்களுக்கு பதில் தருவான் . அவனுடைய முதல் காதல் ,பள்ளிப்பருவத்தில் வளமையாக தொடங்கியது.”மிதுனா” என்ற மிருதுவான பிகரை (அவனே ,அவளைப்பற்றி வர்ணித்தது ) மடக்கினான். இருபது ரூபா கிரீட்டிங் கார்டை கொடுத்து கரெக்ட் செய்த மிதுனாவை, ஓரக்கண் , மாறுகண் என்று பல கலைகளைக் கொண்டு பார்த்து, பேசி மிதுனாவின் மனதுக்குள் நங்கூரமிட்டான். இருவரும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதி ரிசுல்ட்டுக்காக காத்திருந்தார்கள். சரவணன் பாஸாக, மிதுனா ,சரவணனை விட 200 மார்க் பின்தங்கியது ,அவனுக்கு பெரிய விசயமாக தெரியவில்லை ,ஆனால் சுற்றியிருந்த என் போன்ற நண்பர்கள், மிதுனாவின் பாழாய்ப் போன மார்க் லிஸ்ட்டை குறை சொல்லியே, சரவணனின் மனதை மிதுனாவிடமிருந்து வாபஸ் வாங்கவைத்தோம்! கொஞ்ச நாள் வருத்தப்பட்ட சரவணன், ஜென்சியின் வருகையில் மீண்டும் தெளிர்ச்சியடைந்தான் .
ஜென்சி… பன்னிரெண்டாம் வகுப்புக்கு புதிதாக அட்மிஷன் வாங்கி வந்தவள் .ஜென்சியின் அழகை , அவளின் இளமையான முகப்பருவே சொல்லிவிடும். சரவணனுக்கு ஜென்சி மீது இரண்டாவது ,முதல் காதல் தொடங்கியது .ஒவ்வொரு புதிய காதலும், முதல் காதல் தான் என்பது சரவணனின் முக்கியக் கொள்கை .ஜென்சிக்கு கெமிஸ்ட்ரி பாடத்தில் வந்த சந்தேகங்களை, மிகத் தெளிவாக புரிய வைத்து, ஜென்சியுடன் நல்ல கெமிஸ்ட்ரியை உருவாக்கிகொண்டான் .தினமும் பைவ் ஸ்டார் சாக்லேட்டை, சரவனனுக்காக ஜென்சி வாங்கிவருவாள் .படிப்பில் சரவணனை விட ஜென்சி ஒரு படி மேல் என்பதால், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சரவணன் பின் தங்க , ஜென்சி பறந்தோடியது ..சரவணின் வாழ்கையில் வரலாற்றுப் பிழையாகிப்போனது .
பின் ஒரு வருடம் ,கடமைக்காக சில ,பல பெண்களை பார்த்துவிட்டு ,கல்லூரியின் இரண்டாவது ஆண்டில் ,மூன்றாவது முதல் காதலியான கனிதாவை சந்தித்தான் நம் சரவணன் .கனிதாவை நான் வர்ணிக்க சரவணன் (எடிட்டர் ) அனுமதி கொடுக்காததால்,கனிதாவும் ஒரு நல்ல பெண் என்பதை மட்டும் தெரிவித்துகொள்கிறேன் .

செல்போன் பரவலாக பரவியிருந்த நேரமது ,சரவணனும் புது செல்போன் வாங்கினான் ,வாங்கிய கையுடன் ,கனிதாவின் காலேஜ் பேக்கில் போட்டுவிட்டு ,செல்போனை காணவில்லையென்று செல்ல நாடகமொன்றை நடத்தினான் ..அந்த குறும்பில் கனி(தா) மேற்கொண்டு பழமாக ,பின்பு முத்தங்கள் ,சத்தங்களோடு சந்தோசமாக இருந்தான் .இப்படிப்பட்ட முதல் வருட கனிதாவை ,கடைசி வரை காதலியாக வைத்திருப்பேன் என சத்தியம் செய்தான் .சொன்னபடியே கனிதாவை காதலியாகவே வைத்திருக்கும் நிலையும் வந்தது ..கனிதாவின் அப்பாவுக்கு காதல் விஷயம் தெரியவர ,கனிதாவின் கல்லூரிப்படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார் .கையோடு திருமண ஏற்பாடுகளையும் செய்துவிட்டார் .சரவணனுக்கு கல்யாண அழைப்பிதழ் வந்தது ..கடைசி தடவையாக கனிதாவை பார்த்துவிடலாமென எண்ணி புறப்படுகையில் ,அட்ரெஸ் கேட்டு அனிதா வந்தாள் ..
அனிதாவின் கதையை சொல்லலாமென்றால், அதன் பின் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த கல்பனா, மற்றும் உஷாவின் கதைகளைச் சொல்லியாக வேண்டும்.
இதையெல்லாம் வரிசையா ஒவ்வொண்ணா பாத்திடுவோம். அதுக்கு முன்னாடி சரவணனோட அம்மா என்னவோ சொல்றாங்க. என்னான்னு கேட்போமா?
“என் பையன் சரவணன், தங்கமான பையன், அவனுக்கு காதல் என்றாலே சுத்தமாக ஆகாது, பக்கத்துக்கு வீட்டு பொண்ணுங்ககிட்ட கூட பேசமாட்டான்னா பார்த்துக்கோங்களேன்”
நாசமாப் போச்சு!

FRIENDS WITH BENEFITS(2011) (ஹாலிவுட் பட 18+ விமர்சனம் )




பொதுவாக நம்ம ஊர் காதல் கலாச்சாரத்தில் சொல்லப்படுவது ,என்னவென்றால் ,காதலர்கள் காதலை மட்டும் கொண்டாட வேண்டும் .
காமத்தை அல்ல என்று .நடைமுறையில் இந்த கோட்பாடை கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்துகொண்டே இருக்கிறார்கள் இன்றைய காதலர்கள் .
காதல் என்று வந்துவிட்டால் ,காமம் வெளிப்படாமல் போவதில்லை .சரி ,அறிமுகமில்லாத  ,ஆண்,பெண் இருவரும்  ஒருவொருக்கொருவர் விருப்பபட்டு
காமத்தை வெளிபடுத்தினாலும் ,அந்த இடத்தில் காதல் பூக்குமா ? பூக்காதா ? அதுதான் இந்த படத்தின் ஒன் லைன் கதை . 




ஹீரோ வேலை விசயமாக , நியுயார்க்  வருகிறார் .ஹீரோயின்தான் ஹீரோவுக்கு நேர்காணல் நடத்துகிறார் .ஹீரோ பளிச்சென இருப்பதால் ஹீரோயினுக்கு பிடிக்கிறது .
நம்மூர் பெண்கள் சொல்வது போல் ,பிரெண்ட்சாக இருக்கலாமென சொல்லுகிறார் .ஹீரோவும் சம்மதிக்கிறார் .பல விஷயங்கள் பேசுகிறார்கள்.பேச்சு அப்படியே செக்ஸ் பக்கம் திரும்புகிறது .
இருவரும் உடலுறவு கொள்ள சம்மதம் தெரிவிக்கிறார்கள் .ஆனால் ஹீரோயின் ஒரு கண்டிஷனை முன்வைக்கிறார் .உடலுறவு கொள்கையில் காமம் மட்டுமே இருக்கவேண்டும் ,ஒரு துளி
காதல் கூட இருக்ககூடாது என ! இப்படியொரு புதுமையான ஐடியாவை ,எல்லாக் காதலனும் ஒப்புக்கொள்வது போல ,அந்த ஹீரோவும் ஒப்புக்கொள்கிறார் .
ஒவ்வொரு நாளும் ,இவர்கள் இருவருக்குமிடையே நடக்கும் ,காமக் களியாட்டங்களை காதல் ? உணர்வோடு நாமும் பார்த்து பரவசமடையலாம் .இப்படி போய்க்கொண்டிருக்கும்
இவர்கள் வாழ்க்கையில் ,இவர்களுக்குத் தெரியாமலையே ,ஒருவருக்கொருவர் மனதிலும் காதல் தோன்றுகிறது .அதை ஹீரோ சொல்ல வருகிறான் .அவனுடைய காதலை ,ஹீரோயின் ஏற்றுக்கொண்டாளா ?
என்பதை உணர்ச்சியைத் தூண்டி சொல்லியிருக்கிறார்கள் .ஹீரோயின் படுக்கையறை காட்சிகளில்  பின்னி பெடலெடுக்கிறார்.ஹீரோவும் நன்றாக ஈடு கொடுக்கிறார்.


இந்த படத்தை பற்றி எழுதுவதாக எண்ணமே இல்லை ,காதலர் தின கன்றாவிக்காக ,எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது .
நீங்களும் படத்தை பார்த்து பரவசமடையுங்க .


Saturday, February 4, 2012

அப்பா vs மகன் (சிறுகதை )




வீட்டிற்கு வந்ததும் அப்பா ,என் மீது எரிச்சலை கொட்டியது ,ஏன் என தெரியவில்லை .
எந்த தவறை என் மீது கண்டுபிடித்தார் எனவும் தெரியவில்லை .

மூன்று நாட்களுக்கு முன்பு ,"கமலாவிடம்" கைகுலுக்கிக்கொண்டு ,பேசியதை தெரிந்துகொண்டு திட்டினாரா ?

இல்லை ,
ஒரு மாதத்திற்கு முன்பு பெருமாள் கோவிலில், "பிரபாவை" பிரசாதம் வாங்கும்போது கரெக்ட் செய்ததை 
கண்டுபிடித்து திட்டினாரா ?

அதுவும் இல்லையென்றால் ,

மூன்று மாதத்திற்கு முன்பு ,தங்கரீகல் தியேட்டரில் ,தங்க ஜரிகை போட்ட ,பாட்டியாலா சுடிதார் அணிந்திருந்த 
தன்ஷிகாவுக்கு பொறி உருண்டை வாங்கிக்கொடுத்ததை ,என் வளர்ச்சி?? பிடிக்காத ,சில நண்பர்கள் அப்பாவிடம் 
சொல்லிக்கொடுத்ததால் என்னை திட்டினாரா ? என பல தவறுகளை பட்டியல் போட்டு யோசித்துக்கொண்டிருந்த வேளையில் ..

எதற்கும் அம்மாவின் ரியாக்சன் ,எப்படியிருக்கிறது என அறியும் ஆவலில்,கிச்சனுக்குள் போனேன் .

வாடா ரவி ,சாப்பிடுறா ,,என அம்மா டெம்ப்ளேட் வசனத்தை உதிர்த்தபோது ,கொஞ்சம் மனசுக்கு ஆறுதலாய் இருந்தது .அம்மாவிடம் 
நம்மைப்பற்றி ,அப்பா இன்னும் சொல்லவில்லை போல .

ஆனால் ........
அம்மாவை பார்த்தபோதுதான் நியாபகம் வந்தது .அம்மாவின் பால்ய கால  தோழியை பார்க்க ,அம்மாவும் ,நானும் 
போயிருந்தோம் .அம்மா பால்ய தோழியுடன் பேசிக்கொண்டிருக்கையில் ,நான் சும்மா இருக்காமல் ,பால்ய தோழியின் மகளான 
சரண்யாவை ஓரக்கண் வைத்து பார்த்ததை ,நெற்றிக்கண் திறந்து எவன் மாட்டிவிட்டானோ தெரியவில்லை ,என பயந்துகொண்டிருந்த போதுதான் 
சுரேஷின் நியாபகம் வந்தது .

சுரேஷ்ணு சொன்ன உடனே ,ஏன் அப்படிப் பார்க்கிறீங்க ?
நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியுது ,அப்படி எந்தக் கன்றாவியும் இல்லை
சுரேஷ் எனக்கு நண்பன் மட்டும்தான் .

சுரேஷிடம் என் அப்பாவின் எரிச்சலை பற்றி கேட்டேன் .சுரேஷ் சிரித்துக்கொண்டே ,என் வயிற்றில் சிட்ரிக் ஆசிடை ஊற்றினான் .

டேய் ரவி ,மாட்டுனடா மவனே ,
ஏண்டா இப்படிப் பண்ண ?

எங்க அப்பாதாண்டா ,உங்க அப்பாகிட்ட உன் வண்டவாளத்தை சொன்னாரு ,

போயும் போயும் ஏண்டா உனக்கு இப்படி புத்திப் போகுது ,
சுரேஷ் விஷயத்தை சொல்லாமல் ,இழுத்தடிக்கும்போதே எனக்கு தலை சுற்றியது.

டேய் சுரேஷ் ,நேரா மேட்டருக்கு வாடா ? எந்த தப்ப ,எங்க அப்பா தெரிஞ்சுகிட்டாரு ?

அது ஒன்னுமில்லைடா ரவி ,]
மூணாவது தெருவுல ,உங்க அப்பா கரெக்ட் பண்ணி வைச்சுருந்த ,மும்தாஜ் ஆண்டியை ,நீ ரூட் விட்டதை ,எங்க அப்பா பார்த்துட்டார்டா !

அதான் உங்க அப்பாவால தாங்க முடியலை.....

Thursday, February 2, 2012

தமிழக முதல்வருக்கு இது அழகா ?




இந்த வார சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்திருப்பவர்களுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்திருக்கும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா,தன் கடந்த கால அணுகுமுறையை ,மாற்றிக் கொள்ளவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக புரிய வைத்திருக்கிறார்.

உள்ளாட்சித்தேர்தல் முடிந்த கையோடு,பால் விலை ,பேருந்து கட்டணம் உயர்தியதில் ஆரம்பித்து, மின் கட்டணத்தை உயர்த்தப்போகும் எண்ணம் வரை,
ஒவ்வொரு நடவடிக்கையிலும் மக்களின் எண்ணங்களை புரிந்துகொள்ளாமல்எடுக்கப்பட்ட முடிவு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. விலையை உயர்த்தியதற்கான காரணம்
மகா சப்பைக்கட்டு. கஜானா காலி என்பதற்காக ,மக்களின் மீதா பாரத்தை ஏற்றுவது?

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ,சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தேமுதிக உறுப்பினர் ,பால் விலை உயர்வு விசயமாக கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல்,அப்படியே
திசை திருப்பி
 எதிர்க்கட்சி என்னிடம் கேள்வி கேட்பதா ?என்ற
வரட்டு பிடிவாதத்தில் , திராணி இருந்தால் தேமுதிக சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு பார்க்கட்டும் என்று பேசியிருக்கிறார்.
தன் கட்சி சார்பில் ,இதற்கு பதிலளித்து பேசிய விஜயகாந்த் ,ஆளும்கட்சி இடைத்தேர்தலில் ஜெயிக்கும் பாணி எங்களுக்குத் தெரியாதா ?என கேட்டிருக்கிறார்.
அதோடு விட்டிருக்கலாம் ஜெயலலிதா ..




டெப்பாசிட் இழந்த கட்சியென ,தேமுதிகவை கிண்டல் செய்து பேசியிருப்பது ,முதல்வர் பதவியில் அமர்ந்திருக்கும் ஜெயலலிதாவுக்கு துளியும் அழகில்லை ..
அதோடு ,தேமுதிகாவுடன் கூட்டணி வைத்ததற்கு வெட்கப்படுகிறேன் என்றும் பேசியிருக்கிறார். இவையெல்லாம் தேவையில்லாத வார்த்தைகள் என்றே பலராலும்
பார்க்கப்படுகிறது. பின்நாட்களில் இவர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு ,நாடாளுமன்றத் தேர்தலுக்கு ,மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பார்.
வைகோவை அவமானப்படுத்தியாகி விட்டது ,கம்யுனிஸ்டை கண்டுகொள்ளாமல் விட்டாகி விட்டது, விஜயகாந்தையும் வம்புக்கு இழுத்தாகி விட்டது, பாட்டாளி மக்கள் கட்சியை 
பழி வாங்கி விட்டாச்சு,மிச்சம் மீதி இருக்கும்
சமத்துவ மக்கள் கட்சி ,புதிய தமிழகம் , போன்றவைகளையும் சீந்துவதில்லை என்றாகி விட்டது. அரியணையில் ஏற்றி விட்ட தமிழக மக்களையும் மதிப்பதில்லை.

இவை தவிர ,நீதிமன்றத்தின் மூலம் ,தினமும் குட்டு வாங்கினாலும், ஜெயலலிதா திருந்துவதாக இல்லை..நல்லாட்சி தர போராடுகிறோம் ,என்று நாள்தோறும் 
அறிக்கையில் சொன்னாலும் ,அதற்கான ஆரோக்கியமான அணுகுமுறை ,கொஞ்சம் கூட ஜெயலலிதாவிடம் தெரியவில்லை..மின்வெட்டு நேரம், முந்தைய ஆட்சியை விட
பல மணி நேரம் கூடிவிட்டது மட்டுமே ,ஜெயலலிதாவின் சாதனையாக  தெரிகிறது.

முடிவாக ஒன்று! 
இனியும் ஜெயலலிதா மாறுவதற்கு வாய்ப்பில்லை, வளமை போல் ,தமிழக மக்கள்தான் ,அடுத்த மாற்றத்திற்கான நாளுக்காய் காத்திருக்க வேண்டும் .
.

பிரபலமான பதிவுகள்