Loading

Thursday, May 31, 2012

புதுக்கோட்டை இடைத்தேர்தல் -தோற்கப்போவது யாரு ?


புதுக்கோட்டை இடைதேர்தல் திருவிழா களைகட்ட ஆரம்பித்துவிட்டது .திமுக ,மதிமுக ,பாமக,ஆகிய
கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையிலும் ,அதிமுக ,தேமுதிக ,இந்தியஜனநாயக கட்சி மற்றும்
பல உதிரிகட்சிகளும் களத்தில் நின்று புதுக்கோட்டையில் ஒரு திருவிழா எபெக்ட்டை தந்துகொண்டிருக்கிறார்கள் .

அந்த திருவிழா கோலத்திற்கு முழுமுதல் காரணம் ,நம் அதிமுக அமைச்சர்கள்தான்.தொண்டர்கள் படைசூழ
பவனி வரும் காட்சிகளை தினம் தினம் புதுக்கோட்டை வாசிகள் ரசித்துக்கொண்டும்,சகித்துக்கொண்டும் இருக்கிறார்கள் .
தொகுதி வேட்பாளருக்கு எந்த வேலையும் வைக்காமல் ,அமைச்சர்கள் தேர்தல் பணிகளை இழுத்துபோட்டுக்கொண்டு
செய்யும் விதத்தைப் பார்த்தால் ,கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும் என்றே தோன்றுகிறது .
சில அமைச்சர்கள் ,பன்னீர்செல்வத்துடன் மட்டுமே ஒட்டிக்கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள் என்ற செய்தி வருகிறது .
இந்த அசாதாரணமான சூழ்நிலையிலையும் அவர்களின் விளம்பர மோகம் கண்டு ஆச்சர்யப்படாத தொண்டர்களே இல்லை .

புதுக்கோட்டைவாசிகளுக்கு தினமும் குழாய் தண்ணீர் வருகிறது ,மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை ,ரேஷன்கடையில் கூடுதல்
மண்ணெண்ணெய் கிடைக்கிறது ,இந்த மாதிரியான அரும்பெரும் அதிசயங்களை அதிகாரிகள் செய்கிறார்களா? என்று தவறான
எண்ணம் வேண்டாம் ,நம் அமைச்சர்கள்தான் குழாய் தண்ணீர் திறந்துவிடுவதும் ,ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் ஊற்றுவதுமாக
ஒரு பேச்சு நிலவுகிறது .."மக்கள் தொண்டே மகேசன் தொண்டு 'என்று அமைச்சர்களின் முதலாளியம்மா அடிக்கடி சொல்வதன்படி  கேட்கிறார்கள் .
அப்படிப்பட்டவர்களுக்கு ,மக்கள் உரிய கைமாறு செய்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது .

மக்கள் ஆதரவு தருவதா முக்கியம்? , முதலாளியம்மாவின் ஒரு ஓரப்பார்வை அவர்களின் (அமைச்சர்கள் )மீது படவேண்டும் என்றே
இந்த வேலைகளை திறம்பட செய்து வருகிறார்கள் .அதிமுகவின் எடுபிடிகள் ,அப்பிரசன்டிகள் என்று  பொதுமக்கள்
அவர்களை வாழ்த்தினாலும் முகம் கோணாமல் செய்யும் பாங்கை கண்டு  ,மகாத்மா காந்தியிடம் கூட அந்த சகிப்புத்தன்மை இருக்குமா
என்ற சந்தேகம் எழுகிறது .

அப்படிப்பட்ட அமைச்சர்களுக்கு இருக்கும் ஒரே கவலை ,அவர்கள் ஆதரிக்கிற அதிமுக  வேட்பாளர்தான் !இவ்வளவு உழைத்து ,களைத்து
வெற்றியை தேடித் தந்தாலும் இந்த புதுக்கோட்டை வேட்பாளர் என்ன கூறுவார் என்பதைக்கண்டே அவர்களுக்கு வருத்தம் .
அப்படி என்னதான் அந்த வேட்பாளர்(கார்த்திக் தொண்டைமான் ) கூறுவார் என்பதைத்தான் பார்ப்போமே !

இந்த இமாலய வெற்றிக்கு காரணம் ,மாண்புமிகு முதலமைச்சர் ,புரட்சித்தலைவி டாக்டர் அம்மா அவர்கள்தான் .அவர்களுக்கு என் நன்றியை
தெரிவித்துக்கொள்கிறேன் என்றே முழங்குவார் . வீட்டுக்கு வீடு பால் விநியோகம் கூட செய்தோமே ,நமக்கு அந்த பெயர் கிடைக்காமல் போய்விடுமே
என்ற கவலை , அமைச்சர்களுக்கு இப்போதே இருக்கும் என்று தோன்றுகிறது .

வெற்றிபெறுவது அதிமுக வேட்பாளர்தான் என்றாலும் ,தோற்பது சாட்சாத் ,நம்முடைய எடுபிடி அமைச்சர்கள்தான் .  #sosad

Wednesday, May 23, 2012

கிராமத்து சம்பவங்கள் !

சமீபத்தில் அறிந்த  இரு சம்பவங்களை உங்களுடன் பகிர்கிறேன் !


வாழ வழியில்லாமல் இருந்த ஒருவன்,வெளிநாடு சென்று ஓரளவு காசு சம்பாதித்து ,மனைவிக்கு
அனுப்பி வைக்கிறான் ..எதுவுமே தெரியாமல் வாழ்ந்தவன் ,வெளிநாட்டு பகட்டு அவன் மீது
புதிதாக படிய ஆரம்பித்ததும் ,அவனுக்கு சுகபோகமாக வாழவேண்டும் என்ற ஆசை வருகிறது .
கிராமத்திற்கு வந்து சொந்த வீடு கட்டுகிறான் ,நகைகளை வாங்குகிறான் ..இவன் உழைப்பால்
உயர்ந்தவன் என்று ஊர் பாராட்டிக் கொண்டிருக்கையில் ,அவனுடைய மனைவி மட்டும் கவலையில்
உடைந்து கிடக்கிறாள் ..

என்ன விஷயம் என விசாரித்தால் ,அவளுக்கு ஒரு திருமணமாகாத தங்கை ஒன்று இருக்கிறது .
எந்நேரமும் இவளின் கணவன் அவளிடம் கொஞ்சுவதும் ,சிணுங்க விடுவதுமாக செய்து ,
அவளை கர்ப்பவதியாக்கி விடுகிறான்  .இதையறிந்த பொதுமக்கள்  பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள் ..
ஏன் இப்படி செய்தாய் என அவனை கேட்கிறார்கள் .என் மனைவிக்கு வயசாகிவிட்டது ,
அதனால் வேறு வழியில்லாமல் இதை செய்துவிட்டேன் என கூறுகிறான் .பஞ்சாயத்து பெருசுகள் ,
ரெடிமேட் தீர்ப்பை ஒன்றை வழங்குகிறது ..கற்பழித்தவனே திருமணம் செய்ய வேண்டும் என்ற
கொள்கைப்படி ,அவனின் மச்சினிச்சியை திருமணம் முடித்து வைக்கிறார்கள் . ..

மச்சினிச்சியை மாட மாளிகையில் வாழவைத்து ,தன் முதல் மனைவியை
நட்டாற்றில் விட்டுவிடுகிறான்  ..இதனால் மிகவும் பலகீனமடைந்த நிலைக்கு ஆளாகுகிறாள் தற்போது ,உடல்நிலை சரியில்லாமல்
படுத்த படுக்கையாக கிடந்து ,பழைய சந்தோஷ வாழ்க்கையை நினைத்துக்கொண்டிருப்பதாக அறிய முடிந்தது .
.
மற்றுமொரு சம்பவம் !

எந்நேரமும் குடி கும்மாளமுமாக வாழ்க்கையை அனுபவிக்கும் கிராமத்து  இளைஞனை நினைத்து 
அவனுடைய பெற்றோர்கள் வருத்தப்படுகிறார்கள் ..சரி திருமனம செய்துவைத்தால் 
சரியாகிவிடுவான் என நினைத்து ,அவனுக்கு திருமணம் முடிக்கிறார்கள் .
ஒருவகையில் ,அது கொஞ்சம் நல்ல பலனை கொடுத்தது .
கும்மாளத்தை விட்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டான் ..ஆனால் 
தமிழக அரசின் வருமானத்தை பாதிக்கும் என்பதால் குடியை மட்டும் விடவே இல்லை ..
குடும்ப வாழ்க்கையின் மூலம் மூன்று குழந்தை செல்வங்களை பெற்றான் ..
குடும்பம் பெருத்தது ,குடியும் பெருத்துப்போனது ..
இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாத பெண் வீட்டார்கள் 
அவனுடன் சண்டை போட வேண்டிய துரதிஷ்ட நிலையும் வந்தது ..
பஞ்சயாத்தை கூட்டி நம்மை அசிங்கப்படுத்தி விட்டார்களே என எண்ணி ,,
குடிபோதையில் ,எலி மருந்தை குடித்து ..ஒரு லட்சத்திற்கும் மேல் 
பெண் வீட்டாருக்கு செலவு வைத்து விட்டு பரலோகம் சேர்ந்துவிட்டான் ..

இந்த இரண்டு சம்பவங்களிலும் ,பெண்களே பாதிக்கப்பட்டு இருப்பதை 
அறிய முடிகிறது ..கிராமத்திலும் நல்லொழுக்கம் குறைந்து வருகிறதென்பதையே 
இந்த சம்பவங்கள் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது ..

இதுவும் கடந்து போகும் !

Sunday, May 20, 2012

அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியம் !


சமீபத்தில் ,ராமநாதபுரம் மாவட்டம் ,முதுகுளத்தூரில் ,விளையாடிக்கொண்டிருந்த  இரு வாலிப 
வயதுள்ள பையன்கள் ,துரதிஷ்டவசமாக  இடி தாக்கி ,இறந்தார்கள் .உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க  அரசாங்க டாக்டர்கள் இல்லாததால் ,இந்த  இறப்பு சம்பவம் பதியப்பட்டு இருக்கிறது .பொதுவாகவே கிராமப் பகுதிகளில் ,அரசாங்க டாக்டர்களின் நடவடிக்கைகளை தட்டிக் கேட்க 
யாருமே முன் வருவதில்லை .இதை வசதியாக எடுத்துக்கொண்ட டாக்டர்கள் வாரத்தில் ,மூன்று நாள் மட்டுமே வருகிறார்கள் ..அதுவும் பாதி நாள்தான் வேலையே பார்க்கிறார்கள் என்பது மிக நீண்ட 
காலமாகவே நடக்கின்ற  ஒன்று ..

மற்ற நாட்களில் ,டாக்டர்கள் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியை நீங்கள் கேட்டால் ,நீங்கள் இந்தியாவில் இல்லாதவராகத்தான் இருப்பீர்கள் .ஒவ்வொரு டாக்டர்களும் சொந்தமாக கிளினிக் வைத்துக்கொண்டு நாள் தவறாமல் உழைக்கிறார்கள் ..அந்த  உழைப்பில் சிறிய அளவாவது ,அரசு 
மருத்துவமனைகளில் காட்டினாலே போதும் ,நாடே சுபிட்ச  நிலை பெரும் ..

இடி தாக்கி இறந்த சம்பவத்தில் ,கொதித்தெழுந்த  பொதுமக்கள் ,சாலை மறியலில் ஈடுபட்டார்கள் ..
டாக்டர்களுக்கு தகவல் அனுப்பியும் வரவில்லை .. டாக்டர்கள் மேல் பொதுமக்கள் ஆத்திரத்தை 
காட்டிவிடுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்தே இருந்தார்கள் .

ஆதிமுக  எம்எல்ஏ வும் ,சம்பிராதய  விசாரிப்பை ,நடத்தி முடித்து ,கழண்டுகொண்டார் ..நீண்ட நேரம் கழித்து 
அதிகாரிகள் ,சமாதனம் செய்து ..பொதுமக்களை  கலைந்து போக  செய்தார்கள் .ஒரு பேருராட்சி அந்தஸ்தில் உள்ள ஊரில் ,அரசு மருத்துவமனியில் ஒரு டாக்டர் கூட இல்லாதது 
பொதுமக்களிடையே அதிருப்தியை  உண்டாக்கியுள்ளது .

Monday, May 14, 2012

HUGO (ஆஸ்கார் விருது வென்ற காவியம் )ஐந்து விருதுகளை அள்ளிய ஹுகோ திரைப்படத்தை நெடுநாட்களுக்குப் பிறகு இன்றுதான் காண
நேர்ந்தது .விஷுவல் காட்சிகள் ,மற்றும் படத்தொகுப்பில் கலக்கி எடுத்திருக்கிறார்கள் ஹுகோ படக்குழுவினர் .
இப்போதெல்லாம் ஒரு டிராமா கான்செப்ப்டில் படமெடுத்து ரசிகர்களை கவர்வது மிகவும் சிரமமான காரியம் .
அதையெல்லாம் உடைத்து சாமானியர்களை கவரும் விதத்தில் ஹுகோ அமைந்திருக்கிறது .

சிறுவயதிலேயே தாயை இழந்த ஹுகோ ,தன் தந்தையுடன் வாழ்ந்து வருகிறான் .ஹுகோவின் தந்தை
கடிகாரம் செய்து கொடுக்கும் வேலையை செய்கிறார் .அப்படி வேலை செய்துகொண்டிருக்கும் போது ,எதிர்பாராத
தீ விபத்தில் உயிரிழக்கிறார் .இதையடுத்து ஹுகோவை உறவினர் ஒருவர் ,அவர் வேலை செய்யும் ரயில்வே நிலையத்தில் ,
கடிகார கூண்டில் உள்ள ரூமில் வைத்துக்கொள்கிறார் .சில நாட்களில் அவரும் காணாமல் போகிறார் .இதனால் யாருடைய
ஆதரவும் இல்லாமல் ரயில்வே நிலையத்திலேயே வாழ்ந்து வருகிறான்.அவனது அப்பா பரிசாக கொடுத்த ,ஒரு மெக்கானிக்
மிஷினை ரிப்பேர் செய்து ஓடவைக்க முயற்சி செய்கிறான் .அந்த மெஷினுக்கான சாவி (இதய வடிவிலான சாவி )மட்டும் தேவை என்ற நிலை
ஏற்படுகிறது .


இதனிடையே ஹுகோ ,கையில் போதிய பணமில்லாததால் உணவுகளை திருடி உண்பதை ,ரயில்வே நிலையத்தில்
வியாபாரம் பார்க்கும் ஒரு பெரியவர் கண்டுபிடித்து அவன் கையில் வைத்திருக்கும் புத்தகத்தை பிடுங்கிக் கொள்கிறார் .
அதை திரும்ப வாங்குவதற்காக ,அந்த பெரியவரின் வீட்டுக்கு வருகிறான் அந்த சிறுவன் .அங்கு இசபெல்லா என்ற
சிறுபெண்ணை பார்த்து ,தன் விஷயத்தை சொல்கிறான் .நான் புத்தகத்தை  வாங்கித்தருகிறேன் என்று உறுதிகூறுகிறாள்.
இதன்மூலம் இருவரும் நண்பர்களாகிறார்கள். தன்  அப்பா ,அடிக்கடி தன்னை சினிமாவுக்கு கூட்டிப்போவார் என்பதை
சொல்கிறான் ஹுகோ .இசபெல்லாவுக்கோ படமே பார்க்கக்கூடாது என்று  லில்லியின் தாத்தா கட்டளையிட்டிருக்கிறார் .
இதனால் இருவரும் படத்தை யாருக்கும் தெரியாமல்  பார்க்கச் செல்கிறார்கள் .இதனிடையே லில்லியின் கழுத்தில் ,அந்த இதய வடிவிலான சாவியைப்
பார்க்கிறான் ஹுகோ .அந்த சாவியை வைத்து ,அந்த மெஷினை இயக்குகிறான்.அந்த மெஷின் ஒரு படத்தை வரைந்து ,
படத்தின் கிழே ஒரு சினிமா  இயக்குனரின் பெயரை எழுதுகிறது .

ஹுகோவுக்கு ஆர்வம் ஏற்பட்டு ,இசபெல்லாவின்  பாட்டியிடம் அதை கேட்கிறான் .லில்லியின் பாட்டி ,ஆரம்பத்தில் பயந்து ஹுகோவை
கண்டிக்கிறாள் .இதனால ,ஹுகோவும் ,லில்லியும் நூலகத்திற்கு சென்று அந்த இயக்குனரைப் பற்றிய குறிப்புகளை
தேடுகிறார்கள் .ஒரு புத்தகத்தை  பார்த்துக்கொண்டிருக்கும் ,அந்த புத்தகத்தை எழுதிய ஒருவர் ,அவரைப் பற்றிய விபரங்களை
கூறுகிற போது ,ஹுகோவும் ,லில்லியும் ஆச்சர்யமடைகிறார்கள்.அந்த இயக்குனர் வேறு யாறுமல்ல ,ரயில்வே நிலையத்தில் வியாபாரம்
பார்க்கும் பெரியவர்தான் ,அதாவது இசபெல்லாவின் தாத்தா !அதுவுமில்லாமல் ,ஹுகோ வைத்திருக்கும்
அந்த மெக்கானிக் மெஷினையும் இசபெல்லாவின் தாத்தாதான் உருவாக்கினார் என்ற தகவல் தெரிகிறது .


ஒரு இயக்குனராக இருந்து ,பின் ஏன் தனிமையில் ஒதுங்கினார் என்பதை  பின்பாதியில் சொல்கிறார்கள் .இதுதான் ஹுகோ
படத்தின் திரைக்கதை .காட்சிப்படுத்துதலை வெகு சிறப்பபாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு இது முதல் படமென்பது
ஆச்சர்யம்தான் .

அது போல ஒளிப்பதிவு இந்தப் படத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறது ,ஒரே காட்சியை .பல ஆங்கிளில்
காட்டுகிற ஒன்று பிரமிக்கத்தக்கது .இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரம் ,ரயில்வே இன்ஸ்பெக்டராக வரும்
நபர்தான் .அவர் முதலாம் உலகப்போரில் கலந்துகொண்டதால் ஒரு கால் ஊனமாக இருந்தாலும் ,அவர் சிறு குழந்தைகளை
தனியாக கண்டாலே ,கடுப்புடன் ,அவர்களை அனாதை ஆசிரமத்தில் கொண்டு சேர்த்துவிடுகிறார்.நம் ஹுகோவும் அடிக்கடி
மாட்டிக்கொண்டு பின் ஒருவழியாக தப்பிக்கிறார்.அந்த ரயில்வேஇன்ஸ்பெக்டருக்கும் ,அங்கு பூ விற்கும் ஒரு பெண்ணின்
மீது காதல் ,ஆனால் அவரின் முரட்டு சுபாவம் காதலுக்கு ஒத்து வராமல் தடுமாறும் எக்ஸ்ப்ரெஸன் அபாரம் .துறு துறு
சுட்டிப்பையன் ஹுகோவின் இயல்பான நடிப்பு கதையுடன் ஒன்றச் செய்கிறது .

பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலத்தில் நடைபெறும் கதை என்பதால் ,நுணுக்கமாக ஒவ்வொரு
விசயத்தையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள் .கலை நேர்த்தியில் இந்த திரைப்படம் ஒரு மைல் கல்...கடைசியில் ஹுகொவின்
அபார அறிவு நுணுக்கத்தைக் கண்டு ,அந்த பெரியவரே தன்னுடன் வைத்துக்கொள்வதோடு படம் நிறைவுபெறுகிறது .நாவலை
படமாக எடுத்திருப்பதால்  திரைக்கதையில் கொஞ்சம்  தொய்வு ஏற்படுவது தவிர்க்கமுடியாதது.

ஹுகோ -அழகான படைப்பு !

Saturday, May 12, 2012

ஜெயலலிதாவின் ஓராண்டுகால கற்கால ஆட்சி !ஆதிமுக அரசு பதவியேற்று ஓராண்டை எட்டியிருக்கிறது ,அதன் அரும் பெரும் சாதனைகளை
பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம் .பதவியேற்ற முதல் மாதத்திலேயே ,எதிர்கட்சிகளுடன் வழக்கம்போல் சண்டைபோடுவாரென
பலரும் எதிர்பார்த்தபோது ,அதையெல்லாம் விட்டுவிட்டு ,பள்ளிக்குழந்தைகளுடன் சமச்சீர் சண்டை போட்டு
வரலாறு படைத்தார் .

அடுத்ததாக நிலமோசடி வழக்குகள் !ஆரம்பத்தில் திமுக கொள்ளைக்கும்பலிடம் இருந்து நிலத்தை பறிமுதல் செய்ய
நடவடிக்கை எடுத்தாலும் ,பாதி வழக்குகள் ,திமுக புள்ளிகளுக்கும் ,போலிஸ் மாமாக்களுக்கும் நடக்கும் அன்டர்டீலிங்கில்
வழக்குகள் வத்தலாகிப் போனதுதான் மிச்சம் .

இரையை எப்போது பிடிக்கலாமென காத்திருக்கும் நரியைப் போலத்தான் ,கழக அரசும்
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின் ,தன் விஸ்வரூபத்தை வெளிப்படுத்தியது .பால்விலை உயர்வு ,பேருந்துக்கட்டண உயர்வு என்ற
கொடிய பிரமாஸ்திரத்தை மக்கள் மீது ஏவி தன் இரைப்பசியை கொஞ்சமாக தீர்த்துக்கொண்டது .இதற்கு விளக்கம்கேட்கப்
போன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைத்து விஷயத்தை திசைதிருப்பி சாதனை படைத்தது .


இடையே ஒரு மன்னார்குடி  விளம்பர டிரைலர் வேறு மக்களை திசைதிருப்ப
ஓட்டினார் .ஆருயிர் தங்கை சசிகலாவினுடனான ஊடல் நாடகம் அரங்கேறி ,
சில கைதுப் படலங்கள் நடந்தேறி ,பின் ஆருயிர் அக்காவுக்கு கடிதம் எழுதி
முடிக்கப்பட்ட டிரைலரை கண்டு வியக்காத மனிதர்களே இல்லை .சரி ,அவர்களது  குடும்பப் பிரச்சினை ,விட்டுவிடலாம் .


அதற்கு அடுத்த வாரம் ,நூலக இடமாற்றம் என்ற உயர்ந்த கொள்கையை அரசு வெளியிட்டது .நூலகத்தை மாற்றி மருத்துவமனை
,சட்டமன்ற புதிய கட்டிடத்தை மாற்றி மருத்துவமனையென ,இஷ்டத்திற்கு அரசாணையை வெளியிட்டது தமிழக  அரசு .நாட்டில்
மருத்துவமனைகளுக்கு பஞ்சமில்லை ,டாக்டர்களுக்குத்தான் பஞ்சம் என்ற நிலையில் ,மேலும் இரண்டு மருத்துவமனைகள்
கட்ட முடிவெடுத்த அரசின் சாதனையை விவரிக்க வார்த்தையே இல்லை .

அடுத்ததாக யாரும் எதிர்பார்க்காத ,மின்வெட்டு கடாயுதத்தை மக்களின் நடுமன்டையில் நச்சென அடித்த அரசு ,அடித்துக்கொண்டிருக்கும்
அரசை பற்றி விவரிக்க வார்த்தையே இல்லை .சரத்குமார் ,கிருஷ்ணசாமி இவர்கள் இருவரைத் தவிர அத்தனை மக்களும்
தமிழக அரசின் இந்த மின்வெட்டு சாதனையை பற்றி வண்டை வண்டையாக  அரசைப் புகழ்ந்து போஸ்டர்கள்,
ஊர்வலங்கள் நடத்தி அரசை முறையாக கவுரவித்தார்கள் தமிழக பொதுமக்கள். இது போன்ற அரிய சாதனையை
மற்ற மாநிலங்கள் நெருங்கவே முடியாதென்று புள்ளிவிவரங்கள் சொல்கிறது .
மின்சாரம் இல்லாத வேளையில் மின்கட்டணத்தை உயர்த்து என்ற உயர்ந்த கொள்கையை அடுத்து கொண்டுவந்த தமிழகஅரசின்
நிர்வாகத் திறமையை கண்டு ,மக்கள் பேச்சு மூச்சில்லாமல் நிற்கவைத்த அரசு இன்னும் பலசாதனைகள் புரிய
கண்ணீருடன் வாழ்த்துகிறார்கள் .

இப்போதுதான் ஓராண்டு முடிந்திருக்கிறது ,இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறதே, மக்களின் துயர் துடைக்க .!
நிச்சயமாக,  துடைத்து எரியாமல் விடமாடார்கள் ,என்பதை நாங்கள் நம்புகிறோம். ,ரத்தத்தின் ரத்தங்களும் ,ரத்தம் சிந்தி
உழைக்கும் பொதுமக்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்து  சாதனை செய்த தமிழகஅரசை, வாழத்த
நம் வறுமை தடுப்பதால் ,மீண்டும் மேன்மக்களாகிய சரத்குமாரையும் ,கிருஷ்ணசாமியையும் வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.Wednesday, May 9, 2012

MISSION IMPOSSIBLE 4 (அட்டகாச ஆக்சன் சினிமா')ஒரு இரண்டரை மணி நேரம் கிடைத்தால் ,நாம் உடனே யோசிக்கத் தோன்றுவது ,ஒரு நல்ல பொழுதுபோக்கு
சினிமாவைத்தான்.. நம்மை யோசிக்க வைக்காதவாறு ஆட்டிப் படைக்கும் விறுவிறுப்பு திரைக்கதையுள்ள
திரைப்படத்தைத்தான் அதிகம் எதிர்பார்ப்போம் ,அப்படி உங்களுக்கு நேரம் கிடைத்தால் ,கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்தான்
MISSION IMPOSSIBLE 4 !


படத்தின் முதல் அமெரிக்க உளவாளியிடமிருந்து ஒரு ரகசிய கோட் திருடப்படுகிறது .இதனால் அவர்களின்
திட்டம் அம்போவென பாதியில் நிற்கிறது ..அந்த ரகசிய கோட் டை திரும்ப பெற்றுக்கொள்வதற்காக டாம்கிருஸ்சை
ரஷிய ஜெயிலில் இருந்து கொண்டுவருகிறார்கள் ..
அந்த ரகசிய குறியீட்டால் ,அணு ஆயுதத்தை எதிரிகள் ஏவப்போவதாக டாம்கிருஸ் குழு தெரிந்துகொள்கிறது ..
அதை தடுக்க ஒவ்வொரு முறை முயற்சிக்கும்போதும் நிறைய தடங்கல்கள் ஏற்படுகிறது ,இறுதியில் எதிரிகளின்
திட்டத்தை டாம்க்ரூஸ் ஏஜன்ட் குழு முறியடித்ததா என்பதே மிஷன்இம்பாசிபில் திரைபடத்தின் கதை ..


ஜெட் வேகத்தில் பயணிக்கும் திரைக்கதையில் நம்மையறியாமல் அந்த கதைக்குள் ஈடுப்பாட்டுடன்
பயணிக்க முடிகிறது ..டாம் க்ரூஸ்ஸின் வெயிட் மட்டும் கொஞ்சம் கூடியிருக்கிறது ..மற்றபடி ஆக்சன் காட்சிகளில்
அதே பழைய வேகம்தான் .பெரும்பான்மையான காட்சிகளில் ,தொழில்நுட்ப யுக்தியை நிறைய பயன்படுத்தியிருக்கிறார்கள் ..
என்னைப் போன்ற சராசரி தமிழனுக்கு ஆச்சர்யத்தையையும்
துபாயின் மிக உயர கட்டிடத்தில் டாம்க்ரூஸ் ஏறும்போது  அச்சத்தையும் ஏற்படுத்துகிறது ..


கண்களில் மாட்டும் லென்ஸ் மூலம் ஸ்கேன் பண்ணும் டெக்னாலஜி நடைமுறையில் சாத்தியமா என்பது தெரியவில்லை ..
அதிலும் அந்த லென்ஸ் மூலம் பிரின்ட்அவுட் எடுத்துக் கொடுப்பது எல்லாம் டூமச்சாக தெரிந்தாலும் ,கதையின் போக்குக்கு
இந்த லாஜிக் இல்லா காட்சிகள் நன்றாகவே உதவுகிறது .டாம்க்ரூஸ்ஸின் குழுவில் உள்ள மூன்று பேரும்
ஒவ்வொரு பொறுப்பை எடுத்துக்கொள்வது வழக்கமான ,தவிர்க்கமுடியாத அம்சமாகிறது .
அணில்கபூர் கிளைமாக்ஸ் சீனில் சின்ன ரோலில் நடித்திருக்கிறார் .ஒரு ரஷிய கட்டடத்தை வெடி வைத்து 
தவிர்க்கும் எதிரியின் பிளானிங் பிரம்மாண்டம் .

மொத்தத்தில் ,யோசிக்காமல் பார்க்கவேண்டிய பொழுதுபோக்கு டமாக்காதான் இந்த மிஷன் இம்பாசிபில் 4  !

Monday, May 7, 2012

வழக்கு எண் 18/9 (சினிமா விமர்சனம் )


ஏழ்மையில் நிலையில் இருக்கும் ஒருவன், சந்திக்கும் காதலும் ,அதன் எதிர்பாராத தாக்கமும்தான் கதையின் மையக்கரு .
செய்தித் தாள்களில் ஒருவரி செய்திகளில் அடிபடும் சம்பவங்களையே திரைப்படமாக எடுத்து வரும் பாலாஜிசக்திவேல்
இந்த வழக்கு எண் திரைப்படத்தையும் ,செய்தியின் அடிப்படை கருவை மட்டும் எடுத்து மெருகேற்றி ,அழகாக தந்திருக்கிறார் .முதல் காட்சியிலேயே ,ஒரு பெண்ணின் மீது ஆசிட் ஊற்றியதால் ,அவள் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள் .
அதை காவல்துறை விசாரிக்கிறது ..அதிலிருந்து கதை பயணிக்கிறது ..


கதையின் முதல் பகுதி :


கதையின் நாயகனுக்கு,வறுமையால் சிறு வயதிலையே வேலைக்கு செல்லும் சூழ்நிலை ,வடமாநிலத்தில் கடும்
வேலை செய்யும் நேரத்தில் ,நாயகனின் அப்பா ,அம்மா இறக்கிறார்கள் .அனாதையாக ஆகும் நாயகன் ,சென்னைக்கு வருகிறார் .
அங்கு பாலியல் தொழில் செய்யும் ,ரோசி என்ற அக்காவின் மூலம்,பிளாட்பார உணவகத்தில் வேலைக்கு சேர்கிறான் .
இந்த நேரத்தில் ஜோதி என்ற பெண்ணை பார்க்கிறான் .ஆரம்பத்தில் முட்டல்,மோதலுடன் சென்று ,ஒரு கட்டத்தில்
ஜோதி மீது காதலில் விழுகிறான் ,ஆனால் ஜோதிக்கு இவனை கண்டால் ஆவதில்லை ...இந்த நேரத்தில் போலிஸ் அவனை
ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்கிறது


கதையின் இரண்டாம் பகுதி :

ஜோதி வேலை பார்க்கும் வீட்டில் ,ஆர்த்தி என்ற பிளஸ்2 மாணவி இருக்கிறாள் ,அவளை பணக்கார வீட்டுப் பையன்
டாவடிக்கிறான்..முதலில் பாடத்தில்  சந்தேகம் கேட்பது போல உள்ளே வந்து ,ஆர்த்தியுடன் அறிமுகமாகி
கொஞ்சம் கொஞ்சமாக அவளின் அந்தரங்களை படமெடுத்து ,நண்பர்களிடம் காட்டி வருகிறான் ..இதை ஒருகட்டத்தில் அறிந்துகொள்கிற
ஆர்த்தி ,அவனை விட்டு விலகுகிறாள் ..
காரியம் கெட்டுவிட்டதேயென ஆத்திரப்பட்டு ,அவளின் வீட்டிற்கு சென்று ஆசிடை ஊற்றுகிறான் .ஆனால் ,வேலை பார்க்கும்
ஜோதி மீது ஆசிட் பட்டு ,ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கிறார்கள் ..

ஆர்த்தி காவல்நிலையத்தில் உண்மையை சொல்லிவிடுகிறாள் ..பணக்காரப் பையனின் அம்மா ,மினிஸ்டரின்
கீப்பாக இருப்பதால் ,கேஸை ஜோடித்து திசை திருப்புகிறார்கள் ,காவல் துறையினர் ..இறுதியில் என்ன நடந்தது
என்பதுதான் வழக்கு எண் திரைப்படத்தின் திரைக்கதை சுருக்கம் .

காட்சிப்படுத்துதலில் பாலாஜி சக்திவேல் ,உலகப்பட யுக்தியை கையாண்டிருக்கிறார் .கேமெரா கோணமாகட்டும்,
ஒரு காட்சியின் பினிஷிங் ஆகட்டும் ,எல்லாமே நிறுத்தி நிதானமாக செய்யப்பட்டவை என்பது தெளிவாக தெரிகிறது .
தன் முந்தைய படமான கல்லூரி போல் ,சொதப்பலாக ஆகிவிடக்கூடாது என்ற மெனக்கெடல் தெரிகிறது ..
எல்லாமே புதுமுகங்கள் என்பது படத்தின் மிகப்பெரிய பிளஸ் .புதுமுகங்களை வைத்து படமெடுப்பது என்பது
கத்திமுனையில் நிற்பது போன்று ..அதை திறம்பட செய்திருக்கும் பாலாஜி சக்திவேலுக்கு சிறப்பு பாராட்டுக்கள் ..நிச்சயம்
விருது கிடைக்கும் என்பதை எதிர்பார்க்கலாம் ..

நாயகன் ,சாப்பிட வழியில்லாமல் மயங்கிக் கிடக்கும்போது ரோசி என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்மணி ,இட்லி
வாங்கிக் கொடுத்து ,வேலைக்கு சேர்த்துவிடும் ,அந்த காட்சியில் அந்த பெண்மணி போன திசையையே பார்க்கும் அந்தக்
காட்சி மிகச்சிறப்பு ..
அது போல ,நாயகனின் கூடவே வேலை செய்யும் பொடிப்பையன் செய்யும் அட்டகாசங்கள் கொஞ்சம் சிரிக்க வைக்கிறது
பாலாஜிசக்திவேலின் இந்த மாதிரி புதுமுகங்களை படத்தில் அறிமுகப்படுத்தும் போக்கு நிச்சயம் பாராட்டதக்கது .
இசை என்று பெரிதாக இந்த படத்தில் தேவையில்லை என்பதால் ,அடக்கியே வாசிக்கப்பட்டிருக்கிறது .
காவல்துறை வழக்கை ஜோடிக்க செய்யும் கேன்வாஸ் உண்மை நிலையை பிரதிபலிக்கிறது .
ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கதையின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கிறது ..
கதையை மேலும் நீட்டிக்காமல் ரத்தினச் சுருக்கமாக படத்தை முடித்த விதமும் பாராட்டுக்குரியது .
நடைமுறையில் ஒரு பெண் துணிந்து செய்வாளா என்ற கேள்வியை கூட கேட்கமுடியாதபடி
செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல் ..

வழக்கு எண் 18/9- மக்கள் மன்றத்தில் ஜெயித்துவிடுகிறது .
பிரபலமான பதிவுகள்