Loading

Monday, November 28, 2011

மாறுபடாத காதல் கதை !


ல்பனாவை இன்றுதான் பார்த்தேன் .திருநெல்வேலியில் சுலபமாக, அறியப்படாத தெருவில் தற்செயலாக,அவளை பார்க்க
நேர்ந்தது !

,ஆமாம் ,அதே கல்பனாதான் .முன்பொரு நேரத்தில் என் உயிராய் இருந்த அதே கல்பனாதான்.
கல்லூரியில்தான் முதன்முதலில் அவளைப் பார்த்தேன் .ஒடிசலான தேகம் சராசரி தமிழ் அழகு அவளிடம் தங்கியிருந்தது.  மௌன அவதாரத்தில் மட்டுமே அடிக்கடி காட்சி தருவாள் !அதிர்ந்து பேசாத பெண்களை எல்லாருக்கும் பிடித்துப்போவதுபோல், எனக்கும் கல்பனாவை சுலபமாக பிடித்துப்போனது.ஒரு சுப வேளையில் ,என் பிரியத்தை
அவளிடம் வெளிப்படுத்தினேன்..சில நாட்கள் மவுனத்திற்கு பிறகு என்னிடம் பேச ஆரம்பித்தாள்.
சகஜமாக பேசினாளே தவிர எனக்கு சாதகமாக பேசவில்லை ..ஒரு செமஸ்டர் விடுமுறையின் முதல் நாளில் ..

உன்னை எனக்கு பிடிக்குது ரவி என்ற உரைநடையை
புதுக்கவிதை வடிவில் சொன்னாள்.

அப்படிப்பட்ட கல்பனாவைத்தான் இன்று தெருமுனையில்,ஒரு குடம் தண்ணிக்காக அவள் அல்லல்பட்டுக் கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது .என் அலுவலக வேலை விசயமாக ஒருவரை பார்க்க வந்த தருணத்தில் ,இந்த கசப்பான உண்மையை காண முடிந்தது !

காதலின் எல்லை எதுவோ ,அதற்கு மிக அருகில் சென்றது போல், கல்பனாவை அன்று காதலித்தேன் .ஒரு மழை காலத்தில் அவள் நனைந்துகொண்டே கல்லூரிக்கு வந்த
நாளிலிருந்து  ,ஒரு வார காலமாய் காய்ச்சலில் அவதிப்பட்டு கிடந்ததாள்..எந்தக் காதலனும், காதலிக்கு காய்ச்சல் என்றால் ,கொஞ்சமேனும் துடிக்காமலா இருப்பான்?

..நானும் துடித்தேன் ..துடித்ததோடு இல்லாமல் ,அவளுக்கு பிடித்த ஊதா நிறத்தில் ,ஒரு அழகிய குடையை பரிசளித்தேன் ..பிறிதொரு நாளில் கல்பனாவின் அப்பாவுக்கு காதல் விஷயம் தெரிந்து ,கல்பனாவை விஷ வார்த்தைகளால் வாட்டி எடுத்தார்கள் ..

இந்த நேரத்தில் ,இந்திய காதலன்கள் என்ன சொல்வார்களோ ,அதைத்தான் நானும் சொன்னேன் .வீட்டை விட்டு என்னுடன் வா ? என அழைத்தேன் ..கல்பனாவின் நேர்மை புத்தி அதற்க்கு தடை போட்டது ..கண்டிப்பாக காதல் ஜெயிக்குமென நம்பினாள்..

நம்பிக்கைதான் வாழ்க்கை என நம்பியவள் ,அவள் அப்பாவின் மாஸ்டர் பிளான் தெரியாமல் வெகுளியாக இருந்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை .ஒரு கொடும்வேளையில்
சத்தமில்லாமல் ஒரு மாப்பிள்ளையை ,கல்பனாவுக்கு பார்த்து கல்யாணத்தையும் முடித்துவிட்டார்கள் ..எதிர்க்க எனக்கு திராணி இருந்தும் எதிர்க்காமல் போனதின் காரணம்
"கல்பனாவின் மவுனத்தை தவிர வேறொன்றுமில்லை "!

அப்படிப்பட்ட கல்பனாவின் வாழ்க்கை,இன்று  எப்படி போகிறதென்ற கேள்வியாவது? கேட்டுவிடலாமே என கல்பனாவின் திசை நோக்கி நடந்தேன்.

 .என்னை பார்த்த கணத்தில் ,கல்பனாவின் முகம் ,ஆச்சர்யம் கலந்த குழப்பமானது .என்னை வரவேற்று வீட்டுக்கு வரச்சொன்னாள்.
எப்படி இருக்கிறாய்? என்ற சம்பிரதாய கேள்வியை கேட்டேன்
,நல்லா இருக்கேன் ரவி

,நீ எப்படியிருக்க ?

 கல்யாணம் ஆகிடுச்சா ?

 எத்தனை குழந்தையென கேள்வியை அடுக்கினாள்

 .. இன்னும் கல்யாணம் ஆகலை கல்பனா என்றேன்.

அவளின் கணவர் பற்றி கேட்டேன் .
.நல்லா இருக்கார்,எல்ஐசி ஏஜென்ட்ட்டாக இருக்கிறார் என்றாள்

 ..தொட்டிலில்  குழந்தை ஒன்று தெரிந்தது , ஆணா ? பெண்ணா ? என கேட்டேன் ,

 பெண் குழந்தையென சொல்லிவிட்டு குழந்தையை என்னிடம் கொடுத்தாள்..கல்பனாவின் முகச்சாயலை ஓரளவு என்னால் கணிக்க முடிந்தது ! சந்தோசமாகத்தான் இருக்கிறாள் என கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடிந்தது ..இதற்கு மேலும்,அவள் வீட்டில் இருந்து சங்கடம் கொடுக்கவேண்டாமென எண்ணி ,

சரி கல்பனா நான் இன்னொரு நாள் வர்றேன் என்றேன்.

கண்டிப்பா வரணும் ரவி, என சொன்னாள் .

சரியென சொல்லிவிட்டு கனத்த மனதுடன் திரும்பினேன் ..கல்பனா இன்னும் என்னை மறக்கவில்லை என்பதை அவள் வீட்டுச் சுவற்றில் ,நான் பரிசளித்த ஊதா நிற குடை, சொல்லாமல் சொல்லியது !

Friday, November 25, 2011

சிநேகிதி !


என்ன ஒரு ஆச்சர்யம் ,
உன் குரல் ஒலி
என் அழைபேசியில்
நெடு நாட்களுக்குப் பிறகு ,

எப்படி இருக்கிராயென்ற
உன் கேள்விக்கான
பதிலைச் சொல்லவே
பல வார்த்தை தடுமாறுகிறது ,

உன் சிரிப்பலையை
தொலைத்துவிட்டு
எங்கே அந்த பழைய ரவியையென
என்னை மட்டும் கேட்கிறாய் ,

மழுப்பல் பதிலை
கண்டுபிடிக்கும் முன்பே ,
நீயே இடையில் பேசி
என்னை காப்பற்றுகிறாய்,

சொந்தங்களின் கட்டாயத்தால் ,
முடிந்துபோன சடங்கிலிருந்து,
இப்பொழுதான் மீண்டேனென
விரக்தியை உதிர்க்கிறாய் ,

மீண்டும்
நட்பு மலர்வதற்கான
வார்த்தையை கூறுகிறாய்,
நானும் வரவேற்கிறேன் !

Friday, November 11, 2011

அன்புள்ள தோழிக்கு ..என் மதத்தில் பிறந்திருந்தால்,
என்னை மணம் முடித்துவிட்டுத்தான்
மறுவேளை பார்ப்பேன் என
அழுத்த வார்த்தை கூறிச்சென்றாய்..

ஒவ்வொரு முறையும்
இதயத்திலான பரிசுப்பொருளை
பாசமாய் கொடுத்து ,என் இரவை
பாடாய்படுத்திவிட்டுசென்றாய்..

எனக்கு வாய்ப்பவள்
கொடுத்து வைத்தவள் என
அடிக்கடி கூறி
அம்மாவுக்கு வைத்திருந்த மிச்ச அன்பையும்
உனக்கே பொழிய வைத்தாய் ..

போடா பொறுக்கி,முகரக்கட்டையென,
செல்ல வார்த்தை பேசி
இதயத்தினுள் மணி அடிக்கச்செய்து
இனிக்க வைத்தாய் ..

ராட்சசியே ..
வேறு வழி தெரியவில்லை
பிரிந்துவிடமாட்டேனென சத்தியம் செய் .
நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன் ...!


அவள் !தற்செயலாய்தான்

உன் நட்பு
துளிர்விட்டது .

இருநிமிட பேச்சுக்கள்தான்
உன்னுடனான
ஆரம்ப கால சிநேகிதம்

பின் ,
எனக்கான பரிவு வார்த்தைகள்,
உன் உதட்டின் வழியே
வந்தபின் ,

என் மனதின்
உச்சத்தில் நின்றுகொண்டாய் ..

பிடித்த பாடலின் வரிகளை
பிரித்துப் பிரித்து பாட
சொல்லித் தந்தாய்..,

ஒவ்வொரு பண்டிகையையும்
மறவாமல் அறிவிக்க வரும் ,
உன் வாழ்த்து அட்டைகள்
எனக்கு புதியதாய்
அறிமுகமாகின .


மறந்துவிட்டேன் ..
.
.
.
.
.
.
.
இன்னொரு விசயமும்
உன்னால்தான் பழக்கமாகின..

"உன் கணவருடனான இனிய நட்பும்" !

Thursday, November 10, 2011

முதலெழுத்து !

எனது

கவிதைகளின் வரிகளில்,

எங்கோ ஓர் வார்த்தையில்

உன் பெயரின் முதலெழுத்தை

சேர்க்காமல் இருப்பதில்லை.

எதற்காக சேர்த்தேன் ?

நீ என்னை காதலித்த
நன்றிக் கடனுக்காகவா ?

என்னுள் கிடத்திச்சென்ற
உன் நினைவுகளுக்காகவா ?

என் விரல்களி எச்சில் அப்பிய
உன் இனிய முத்தத்திற்காகவா ?

எப்படியோ,

எனது கவிதைகளின் வரிகளில்,

எங்கோ ஓர் வார்த்தையில் ,

உன் பெயரின் முதலெழுத்தை.........
.
.
.
.

.
.
மன்னிக்கவும் ,

உன்னுடன் சேர்த்து

காயத்ரி ,திவ்யா ,ராஜினி....

இவர்களுடைய பெயரின் முதலெழுத்தையும்

என் வார்த்தைகளில் சேர்க்காமல் இருப்பதில்லை !

Tuesday, November 8, 2011

முதல் இடத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சி !


ஒரு தொலைகாட்சியை தொடங்கி சில மாதங்களில்  நம்பர் 1 இடத்தை பிடிக்க முடியுமென்றால் ,அது அசாதரணமான விஷயம் ,அந்த விசயத்தை செய்துமுடித்திருக்கிறது புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி !

தமிழகத்தில் செய்திகள் என்றாலே "சன் செய்திகள்" என்று அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தது சன் டிவி ,நாளடைவில் ஜெயா நியுஸ், ராஜ் நியுஸ் ,கலைஞர் செய்திகள்,போன்ற முழு நேர செய்தி சேனல்கள் வந்த போதிலும் ,சன் நியுஸ் சேனலை மட்டுமே பார்த்து வந்தவர்கள் தமிழகத்தில் ஏராளம் !


தமிழகத்தில் என்னதான் நிறைய செய்தி சேனல்கள் இருந்த போதிலும் ,நடுநிலைத்தன்மை என்பது கடுகளவில் கூட கிடையாது .இவர்கள் நினைத்தால் ,அயோக்கியனை கூட உத்தமனாக்கி விடுவது போலவே ,செய்திகளின் லட்சணம் இருந்து வந்தது !இந்நிலையில் ,புதிய தலைமுறை தொலைக்காட்சி தொடங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இது எந்த கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சி என்பதற்காகவே, செய்திகளை பார்த்தவர்கள் ஏராளம்.ஆனால் ,மக்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே செய்திகளை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்கள்.


ஆங்கில செய்தி சேனல்கள் பாணியில், செய்திகளை தொகுத்து வழங்கிய விதம் ,தமிழக மக்களுக்கு புதிதாக தோன்றியது! அரசியல் நிகழ்வுகளின் அலசல்கள் ,சமூக விழிப்புணர்ச்சி ஆக்கங்கள் என கொஞ்சம் புதிய பாணியில் வழங்கிய விதம் ,பொதுவாக எல்லாருக்குமே பிடித்திருந்தது !இந்நிலையில் தான் நேற்றைய கருத்துகணிப்பு வெளியாகியது.,தமிழகத்தின் செய்தி சேனல்களில் முதல் இடத்தை ,இது வரை தக்கவைத்துக் கொண்டிருந்த சன்நியுஸ் சேனலை ,பின்னுக்கிழுத்து புதியதலைமுறை தொலைக்காட்சி முதல் இடத்தை பிடித்திருக்கிறது !


 புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் !


Friday, November 4, 2011

ராமதாஸ் vs வேல்முருகன்


பல பக்கம் தாவும் கட்சிதான் "பாமக" என்பது நாடறிந்த விஷயம்.அப்படிப்பட்ட கட்சிக்குள்தான் உட்கட்சி பூசல் கிளம்பியிருக்கிறது .சட்டமன்ற படுதோல்வி,உள்ளாட்சி தேர்தலில் வீழ்ச்சி என படுபாதாளத்தில் கட்சி இருக்கும்நேரத்தில் வேல்முருகன் உட்பட மூன்று எம்எல்ஏக்கள் தலைமைக்கு எதிராக தனி ஆவர்த்தனம் நடத்த கிளம்பியிருப்பது ராமாதாசுக்கு தலைவலியை ஏற்ப்படுத்தியிருக்கிறது !
திராவிட கட்சிகளை போன்றே ,தலைமையின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வளர வேண்டுமென்பதில் பாமகவும் தெளிவாக இருக்கிறது .வேல்முருகன் எம்எல்ஏ தனக்கென்று ஒரு தனிப்பட்ட செல்வாக்கை வளர்க்க ஆரம்பித்திருப்பதால் வந்த பிரச்சினைதான் இது .

தன்னை வளர்க்கவும் ,தன் மகனை டெல்லியில் வளர்த்தெடுக்கவும் அவருக்கு வாய்த்த ஜாதி என்ற துருப்புசீட்டை நம்பி இருபது வருடத்தை  ஏற்ற கட்சியை இறக்கங்களுடன் நடத்திவந்த ராமதாசுக்கு இப்போது வந்திருக்கிற சோதனை சத்திய சோதனைதான் !

பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் பேசுகிறார் என்றால் ,அவர் பேச்சில் அதிகாரியை அடி ,பத்திரிக்கையை எரி, அரசு அலுவலகங்களை பூட்டு என்ற வரிகளை கேட்க்காமல் இருக்க முடியாது ,அப்படிப்பட்ட தலைவனின் பேச்சை கேட்டு வளர்ந்த பாமகவின் எம்எல்ஏக்கள், ராமதாசுக்கே எதிராக கிளம்பியிருப்பதில் ஆச்சர்யமில்லை .

வேல்முருகன் தன பங்கிற்கு ,ராமதாசிற்கு எதிராக சிடி ஒன்ற ஆதாரமாக வைத்திருப்பதாக ஒரு அதிரடி அறிக்கையை அளித்திருக்கிறார் .அதோடு இல்லாமல் அதிமுக ,திமுகவிலும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று ஒரு பிட்டை முன்பே சாமர்த்தியாக தெரிவித்துவிட்டார் .ராமதாசை நம்பி இன்னுமா அவரிடம் கூட்டம் இருக்கிறது ? என்ற மக்கள் யோசிக்கும் முன்னே ,வேல்முருகனும் தன பங்குக்கு  சில அல்ல்லக்கைகளை இழுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்தியிருக்கிறது.!

ஆறு மாதம் "போட்டி பாமக" என்ற ஒரு லெட்டர்பேட் கட்சியை வைத்திருந்துவிட்டு ,(இந்த மடம் இல்லைனா சந்தை மடம் என்பது போல) திமுக அல்லது ஆதிமுக என்ற கட்சியில் வேல்முருகன் ஒட்டிகொள்வார் என்பதை முழுமையாக மறுப்பதற்கில்லை.

அதுவரை இவர்களின், பொழுதுபோக்கு சண்டையை ,பார்த்து மகிழவேண்டியதுதான் பாக்கி !

Wednesday, November 2, 2011

மாறவில்லையா ஜெயலலிதா ?எந்த விசயத்தையும் எடுத்தேன் ,கவிழ்த்தேன் என முடிவெடுப்பதில் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதாதான் என சொல்லிவிடலாம் !ஆட்சிக்கு மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுவிடுமோ என்ற துளி பயமில்லாமல் எதையாவது செய்து தொலைப்பது அம்மையாரின் ஆதி குணங்களில் இதுவும் ஒன்று .நேற்றைய அறிக்கையில் ,சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை அதிநவீன குழந்தைநல மருத்துவவமனையாக மாற்றப்படுமென அறிவித்தார் .சில மாதங்களுக்கு முன்புதான் ,கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்தை மருத்துவமனையாக மாற்ற உத்தரவிட்டார்,அதை செயல்படுத்துவதற்கு முன்னமே மற்றுமொரு மருத்துவமனை என்ற அறிக்கை வந்து விழுகிறது.

இதில் மக்களுக்கான மருத்துவமனையாகத்தானே மாற்றப்போகிறார்கள் என்ற எண்ணத்திற்கு பதிலாக, ஒருவித மனக்கசப்பே தோன்றுகிறது, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளை முதலில் சீரமைத்தாலே பெரும்பாலான மக்கள் பயனடையலாம் என்ற நிலை இருக்கையில், கடந்த ஆட்சியாளர்களை பழி வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த முடிவாகத்தான் தோன்றுகிறது.
குழந்தநலப் பிரிவை ஓமந்தூரார் கட்டிடத்திலேயே அமைக்கலாமே ,அங்கு இல்லாத இட வசதியா ?நூலகம்தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை மேலோட்டமாக காட்டக்கூடிய ஒன்று. இருக்கிற புத்தகங்களை ஒரு பாழடைந்த கட்டிடத்தில் மாற்றி செல்லரித்து போவச்செய்வதுதான் வளர்ச்சியா ?

எவ்வளவோ நலத்திட்டங்கள் நிலுவையில் இருக்கையில் ,அதைசெயல்படுத்த முனையாமல் ,எதையாவது தான்தோன்றித்தனமாக செய்வதற்கா உங்களை முதல்வர் வேலையில் பணியமர்த்தினோம் ?கொஞ்சமாவது மாறுங்கள் !


பிரபலமான பதிவுகள்