Loading

Friday, July 27, 2012

பிரபலம் !


சரியாக 12 வருடங்களுக்கு முன் ,எங்கள் கிராமத்தில் கோவில் திருவிழா சமயம் ,
ஒவ்வொரு பெரிய மனிதர்களும் தன் பங்குக்கு ,இரவு நேர நிகழ்ச்சிக்கான பொறுப்பை
எடுத்துக்கொள்வார்கள்.ஆடல் பாடல் ,இசைநிகழ்ச்சி'நாடகமென ஒவ்வொரு நாளும்
நடைபெறும்.அப்படிப்பட்ட நேரத்தில் ,அந்த நேரத்தில் எம்.எல்.ஏ  வாக இருந்த ஒரு பெரியவர்.
ஒரு இளம்பெண்ணை மேடை ஏற்றி ,இவர்தான் கிருபானந்த வாரியாரின் இளம்சிஷ்யையென
அறிமுகப்படுத்தினார்'.சொற்பொழிவாற்றுவதில் திறமை மிக்கவரென சிலாகித்தார்.

அவர் சொன்னபடியே ,நிறைய புராணக் கதைகளை ரசிக்கும்படியாகவே சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்
அந்தப் பெண்.அதே  நேரத்தில் சொற்பொழிவு கேட்பதில் ,எங்கள் கிராமத்து மக்களுக்கு மிகவும்
அயர்ச்சியாக இருந்ததால் ,நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்கள்.அதைக்கண்டும் ,மனம்தளராமல் .அதைப் பற்றி கவலைப்படாமல்
அந்தப் பெண் உரையாற்றிக்கொண்டிருந்தாள்.

அந்த எம்.எல்.ஏ இருக்கும்வரை ஒவ்வொரு திருவிழா சமயம்  அந்தப் பெண் ,கண்ணன் கதைகள்.
ராமாயண நெறிமுறைகள் ,என பல ஆன்மிக கதைகளை ஒவ்வொரு தினமும் கூறிக்கொண்டிருந்தார்.அதைக் காத்துகொடுத்துக்
கேட்க ஒவ்வொரு வருடமும் கணிசமான அளவில் மக்கள் கூட ஆரம்பித்தனர்.ஒருமுறை என் அப்பா கூட ,அந்தப் பெண்ணின்
பேச்சுத் திறமை கண்டு ,அவருடைய சொற்பொழிவு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தார்.அந்த பெண் கூட எங்கள் வீட்டில்
இரண்டு நாள் தங்கினார்.மிகவும் எளிமையாக ,நம் வீட்டுப் பெண் போல நடந்துகொண்டார்.3000ரூபாய்,4000ரூபாய் அளவுக்கு
சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்ததால்,சுற்றியுள்ள கிராமங்களிலும் அந்தப் பெண்ணை சொற்பொழிவாற்ற
கூப்பிட்டார்கள்.எப்போது மெட்ராஸ் வந்தாலும் ,எங்கள் வீட்டுக்கு வாருங்களேன கூறிவிட்டுச் சென்றார்கள் அந்தப் பெண்ணின் குடும்பத்தார்.

பின் ஒரு லோக்கல் சானலில் ,அரை மணி நேர ஆன்மீக சொற்பொழிவாற்றி ,அதை சிடியாக விற்க ஆரம்பித்தார்.
மூன்று வருடங்களுக்கு முன்புதான் சொற்பொழிவாற்ற 7000ரூபாயாக மாற்றினார்.அந்த சமயம் ,டிவி சானல்களில் தோன்றி ஆன்மீக
உரையாற்றினார்.என் அப்பா கூட சந்தோஷப்பட்டார்.பின் சன் டிவி ,ராஜ் டிவி ,ஜெயா டிவியென பல சானல்களில் தற்போது
ஆன்மிக தளங்களை பற்றி நிகழச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த முறை ஊர் திருவிழாவிற்காக ,அப்பா ,அந்தப் பெண்ணை அழைத்துவர நினைத்து அந்த பெண்ணின் அப்பாவிடம் பேசினார்.
"ஒரு மணிநேர சொற்பொழிவிற்கு 40,000 கேட்டார்'.
எதுவும் பேசாமல் அப்பா தொலைபேசியை வைத்துவிட்டார்.

மிருணாள்சென்(Mrinal sen)


இந்திய சினிமா ,தனது நூற்றாண்டை கொண்டாடும் இந்த வேளையில்,
அதன் பிதாமகர்களில் ஒருவரான ,மிருணாள்சென் 90வயதை எட்டியிருக்கிறார்.அவருடைய
கை பிடித்து நடை பழகியதுதான் இந்திய சினிமா என்று சொல்லலாம்.80களில் வேலைக்குச்
செல்லும் ஒரு பெண் ,இரவில் வீட்டுக்குத் திரும்பாமல் ,அடுத்த நாள் காலை வந்து தன்னுடைய தினசரி,அலுவல்களைத்
தொடர்ந்துகொண்டு இருப்பாள்.அவளிடம் எந்தவொரு மாற்றமும் தென்படாது.அவளைத் தேடி இரவுமுழுக்க
ஊரெல்லாம் அலைந்த குடும்பமோ,பேயறைந்துகிடக்கும்.
"ஏக் தின் பிரதி தின்" படத்தில் இப்படியொரு காட்சியைவைத்து,நம் வீட்டுப் பெண்கள் மீது நமக்கே நம்பிக்கை இல்லை
' என்று சமூக குற்றவுணர்வுகொள்ளச் செய்தவர்."புவன் ஷோம்" படத்தில் 50  வயது நபரை நபரை 20 வயதுப் பெண்
காதல் கொள்வது  போன்ற கலாசார அதிர்வுகளை ஏற்படுத்தியவர்.சிதைந்த கட்டடத்தில் சிரமத்தில் வாழும்
ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையையும் இடிபாடுகள் சூழ்ந்து நிற்கும்
சோகத்தைச் சொல்லும் "காந்தர்" படத்தின் உருக்கத்தை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது.மிருணாள் சென்னின்
"மிடாஸ் டச் "சுடன் வெளிவந்த படங்கள் அனைத்துமே புதிய அலை சினிமாக்கள்தான்.

"மிருணாள் டா" என்று அன்புடன் அழைக்கப்படும் மிருணாள்சென் கல்கத்தா பல்கலைக்கழக மாணவராக
இருந்த காலத்தில் ,கம்யுனிஸ்ட் கட்சியின் கலாசாரப் பிரிவில் தொண்டரும்கூட.

ஆரம்பத்தில் "மெடிக்கல் ரெப்" ஆகச் சில காலம் அலைந்துவிட்டு பிறகு ,ஆடியோ டெக்னிஷியனாக சினிமாவில்
சேர்ந்தார் சென்.1955-ல் சாதாரண நடிகராக இருந்த உத்தம் குமாரை நாயகனாகக்கொண்டு ராட்போர் என்ற படத்தை
என்ற படத்தை இயக்கினார் சென்.படம் ஓடவில்லை,அடுத்து நீல் "ஆகஷெர் நீச்சே "என்ற படத்தை இயக்கினார்,
இந்தியாவின் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் இறுதித் தருணங்களில் ஓர் ,இந்தியப் பெண்ணுக்கும்,புலம்பெயர்ந்த
சீனக் கூலிக்கும் இடையிலான அன்பைச் சொல்லும் அந்தப் படத்தின் பின்னணியில் அரசியல் நெடி தூக்கலாக
அமைந்திருந்தது.இதனாலேயே, இந்திய அரசாங்கம் தடை செய்த முதல் படமானது அந்தப் படம்.
இரண்டு வருடங்களுக்கு இந்தத் தடை நீடித்தது,அடுத்தடுத்தும் அரசியல் பேசும் படங்களையே இயக்கினார் மிருணாள்சென்.

மிருணாள்சென்னின் படத்தை தடை செய்த ,அதே இந்திய அரசுதான் 1964-ல் இந்தியாவின்
5000 ஆண்டு கால வரலாற்றை ஆவணப் படமாக எடுக்கச் சொல்லி அவரிடமே வந்து நின்றது .'மூவிங் பெர்ஸ்பெக்டிவ்ஸ்'
என்று தலைப்பிட்டு அந்தப் படத்தை இயக்கினார்.ஃபனா, 'தோபி காட்' கஹானி போன்ற சமீபத்திய படங்களில் கதை நிகழும் நகரங்களும் கதாபத்திரமாகின.
இப்படியான படங்களுக்குப் பாதை அமைத்தது சென்தான்.அவருடைய "இன்டர்வியு" "பதாதிக்" "மஹாபிரித்வி"
போன்ற பல படங்களில் கொல்கத்தா ஒரு கதாபாத்திரமாகப் படம் முழுக்க நிறைந்திருக்கும்.சென்னின் முதல் படத்தில்
நடித்த உத்தம்குமார் ,பிறகு வங்காள சினிமாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.ஆனால் சென்னுக்கு எப்போதும்
ஹீரோக்கள் தேவைப்பட்டதே இல்லை,கதைதான் அவருக்கு ஹீரோ .

தேர்ந்த வாசிப்பு அனுபவம் மிக்கவராக இருந்ததால்தான் புகழ்பெற்ற வங்காள எழுத்தாரும் ,சென்னின் நண்பருமான
சுபோத் கோஷின்"கோத்ரண்டா" கதையை "ஏக் அதூரி கஹானி'என்ற படமாக எடுக்க முடிந்தது.
நமக்கு துயரத்தை ஏற்படுத்துகிற எதிரிகள் வெளியே இருக்கிறார்கள் என்று மற்ற இயக்குனர்கள் படங்களை
மையபடுத்திக்கொண்டு இருந்த போது,உண்மையான எதிரி நமக்கு உள்ளேயே இருக்கிறான். என்று சொல்லி,மத்திய தர
வர்க்கத்தின் உலகம் ,அதனுடைய விருப்பு ,வெறுப்புகள் போன்றவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சியவர் சென்.இந்திய சினிமா
இவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட மிக முக்கியமான 'கிரியேட்டிவ்'பார்வை இது.இவரின் பல படங்களை
பெர்லின்,வெனிஸ்,மாஸ்கோ,சிகாகோ,கெய்ரோ என பல உலக அளவிலான திரைப்பட விழாக்களில்
திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வென்றிருக்கின்றன.இவருடைய 'காந்தர்"திரைப்படம் மட்டுமே 1984 மற்றும் 2010
ஆகிய வருடங்களில் கேன்ஸில் இரண்டு முறை திரையிடப்பட்டு இருக்கின்றன.ஓர் இயக்குனரின் பெருமையை உணர்த்த
இதைவிட வேறென்ன அங்கீகாரம் வேண்டும் .

"இன்று என்னிடம் ஐந்து கோடி ரூபாய் கொடுத்து படம் இயக்கித் தரக் கேட்கிறார்கள்.அந்தப் பணத்தில் நான் ஐந்து
படங்கள் எடுத்து விடுவேன்" சமீபத்தில் நடந்த அவரின் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் இப்படிச் சொல்லிச் சிரித்திருக்கிறார் சென்.
திரைப்பட இயக்குனர்கள் எல்லாம் சமூக விஞ்ஞானிகளாகவும் இருக்க வேண்டும் என்று எப்போதும் தன்
மாணவர்களிடத்தில் சொல்வார் சென்.சொல்வதோடு மட்டும் அல்லாமல் ,தன் சொற்களுக்கு ஏற்றபடியே
வாழ்ந்துவருகிறார் என்பதுதான் மற்றவர்களிடத்தில் இருந்து மிருணாள்சென்னைத் தனித்துவப்படுத்துகிறது.

                                                                                               நன்றி ஆனந்தவிகடன் !
Tuesday, July 24, 2012

ஜெயலலிதாவின் தொடர்கதை !


ராமாயணத் தொடர் கூட இத்தனை வருடமாக இழுத்திருக்க முடியுமா என தெரியவில்லை.அதையும் தாண்டி
அம்மையாரின் (ஜெயலலிதா )வழக்கை வாரம்,போய்,மாதம் போய் ,வருடங்களும் கடந்துகொண்டே இருக்கின்றன.
மற்றவர்களின் வழக்குகளை எல்லாம் விரைந்து முடிக்கச் சொல்லி ,அறிக்கை விடும் ஜெயலலிதா ,
தன்னுடைய  வழக்கு நிலுவையில் இருக்கிறதென்பதை மறந்தும் ,பொதுவெளியில் காட்டிக்கொள்ளாமல்
நடந்துகொள்கிறார்.

ஒரு நிருபரிடம் ஜெயலலிதா இப்படிப் பதில் சொல்கிறார்,என்னையும் ,கருணாநிதியையும் ஒப்பிட்டுப்
பேசாதிர்கள்,நான் ஊழல்வாதி இல்லையென,ஆங்கில சானல் நிருபரிடம் இப்படிக் கூறுகிறார்.
அவருக்கு ,பெங்களூரு நீதிமன்றத்தில் ,தன் மீதான ஊழல் வழக்கு இருப்பதாகவே ,நினைக்கவில்லை.
அப்படிப்பட்ட நேர்மையான ? ஜெயலலிதா ,தன் மீது புனையப்பட்ட வழக்கென ஒவ்வொரு முறையும்
கூறிக்கொள்பவர்,நேரடியாக சென்று வழக்கை சந்தித்திருந்தால் ,ஒரு வருடத்தில் முடிந்திருக்குமே.

ஒவ்வொருமுறையும் ,எதையாவது காரணம் சொல்லி ,கீழ்கோர்ட்,மேல்கோர்ட்டென அப்பீல் வாங்கி ,தனிநீதிமன்றம்
அமைத்து,பின் அங்கேயும் உயர்நீதிமன்ற அப்பீல்,உச்சநீதிமன்ற அப்பீல் என காலம் கடத்திக்கொண்டிருப்பதைப்
பார்த்தாலே தெரிகிறதே ,ஜெயலலிதா  ஒரு வரலாற்று சிறப்புபெற்ற ஊழல்வாதியென.அரசு வழக்கறிஞர்,அடுக்கடுக்காக
ஜெயலலிதா  மீது ஆதாரப்பூர்வமாக குற்றச்சாட்டை வைத்து வாதாடினால்,அதற்கான விளக்கத்தை தராமல்,அந்த
வழக்கறிஞரை மாற்றத்தான் ஜெயலலிதா அன் கோ  முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.


ஜெயலலிதாவின்  தொடர்கதையில் ,இரண்டாவது கதாநாயகியான சசிகலாவை விட்டு ,எல்லாவற்றுக்கும் தானே பொறுப்பென
வாக்குமூலம் கொடுக்கவைத்தாயிற்று.இருப்பினும்,நீதிபதி அம்மையாரை விடுவதாக இல்லையென தெரிந்தபின்,
உடல்நிலை சரியில்லை,சசிகலாவுக்கு ரத்த அழுத்தம் ,தினகரனுக்கு வாய்ப்புண் என சகட்டு மேனிக்கு ,அசட்டு 
காரணங்களை அடுக்கி ,அடுத்தடுத்த வாரங்களை கடந்தாயிற்று .நீதிபதியும் வெறுத்துப்போய் ,அடுத்தமுறை 
காரணம் எதுவும் சொல்லக்கூடாதென,கண்டிப்புடன் கூறி ,வழக்கு விசாரணையை ஜூலை31ம் தேதி 
ஒத்திவைத்துவிட்டார்.இப்போதும் ஒரு காரணத்தை சொல்ல ,ரெடியாக இருக்கிறார்கள்.

இன்னும் எத்தனை மாதங்கள் ,வருடங்கள் இந்த பெங்களூரு தொடர்கதையை இழுக்கப் போகிறாரென தெரியவில்லை.

வளர்க ஜெயலலிதாவின் தொடர்கதை.

Monday, July 23, 2012

விலைவாசி !


ஆடிக்காத்துல தலைவிரிக்கோலமாத் திரியுறோமேன்னு நினைச்சு முடியை வெட்டலாமுன்னு போனா ,
100 ரூபா கேக்குறான் .போன தடவை வெட்டுனப்ப 80ரூபாதான் கொடுத்தேன்னா ,அது போன
மாசம்;இது இந்த மாசம் அப்படீங்கிறான்.

என்னய்யா இப்படி ஏத்திகிட்டே போற அப்படின்னு அதட்டிக் கேட்டா,என் கடை,வீடு எல்லாத்தோட வாடகையை
ஏத்திகிட்டே போறானே,மொதல்ல அவனை நிறுத்தச் சொல்லு,பிறகு நான் நிறுத்துறேன்னு
வசனம் பேசுறான் .
அப்படி என்னய்யா வாடகையை ஏத்திட்டான்னு கேட்டேன்.100சதுர அடி கடைக்கு 5000-ன்னு சொல்றான்.போன
மாசம் வரைக்கும் 3500ரூபாய்தான் கொடுத்தானாம்.12 வருஷத்துக்கு முன்னாடி காம்ப்ளெக்ஸ்(மூணே கடைதான்)
கட்டினப்ப முதல்முதலா 300 ரூபாய் வாடகை கொடுத்து பூஜைபோட்டு கடையை வச்சேன் சார்.ஓனர் தாத்தா அப்பல்லாம்
நல்லவரா இருந்தாரு.நேத்தைக்கு திடீர்னு வந்தாரு.இந்த மாசத்திலேயிருந்து 5000 வாடகை கொடுத்துடுன்னாரு.நான்
பதில் சொல்றதுக்கு இஷ்டமில்லாட்டி காலி பண்ணிக்கன்னுட்டார்.

கடைக்காரன் சொன்னதைக் கேட்டதும்,உடனே ஓனர் தாத்தாவைப் பார்த்து,உனக்கு ஏன்யா இந்த பேராசை?
உன்னாலதானே எனக்கு முடிவெட்ட 20ரூபாய்அதிகமாயிடுச்சுனு நாக்கைப் பிடுங்குற மாதிரி பேசிடுவோமுன்னு
நினைச்சேன்.கடையின் பின்னால் இருந்த அவருடைய  வீட்டை எட்டிப் பார்த்தேன்.இந்தியன் தாத்தா மாதிரி சேரில்
உக்காந்து பேப்பர் படிச்சிகிட்டு இருந்தார்.அவருக்கு ஒரு வணக்கம் வச்சிட்டு,என்னோட பேரு ஏகாம்பரம்னு
என்னை அறிமுகப்படுத்திகிட்டு கடை ஏதாவது வாடைகைக்கு இருக்கான்னு கேட்டேன்.

"கடையெல்லாம் இல்லையப்பா!இந்த காலத்துல எவன் கடையை காலி பண்றான்?மூணு பேரும் 12வருஷமா இருக்கானுங்க.
காலி பண்ணா வாடகையை 7000ன்னு ஏத்தலாம்னு பாக்கேன்.பழைய ஆளுங்களாச்சேன்னு பரிதாபப்பட்டு 5000த்துக்கு
விட்டுருக்கேன்" என்றார்.

நைஸாகப் பேசினப்ப ,அவர் முழுக்கதையும் வெளியே வந்துச்சு.வேலை பார்க்கும்போது வாங்கிப்போட்ட இடத்தில்
ரிட்டையர்மென்ட் பெனிஃபிட்டில் கடையும் வீடும் கட்டினாராம் தாத்தா .பென்ஷன் இல்லாத உத்தியோகம்.தாத்தா
பாட்டி இருவருக்கும் மருத்துவச் செலவு 4000-5000-ன்னு ஆகிறதாம் .பத்து வருஷத்துக்கு முன்னாடி கொடுத்த மூன்று
கடை அட்வான்சும் சேர்த்து 3000ரூபாய் எஃப்டியில் இருக்காம் .

தாத்தா,பாட்டி ரெண்டு பேருக்கும் ஒரு டீசன்ட் லிவிங்கிற்கு 15000 வேணுமாம்.இன்னைக்கு ஒரு கடைக்கு 7000
வாடைகைங்கிற கணக்குல பத்து மாச அட்வான்ஸ் வாங்கினா 2,10,000 ரூபாய் கிடைக்கும் என்று கணக்கு போட்டார்,ஆனா
ரொம்ப பெரிய மனசு பண்ணி ,5000 ரூபாய்தான் வாடகை வாங்குறார்.அவரு என்ன பண்ணுவாரு,மருத்துவச் செலவு ,,டிவி
மொபைல்,சாப்பாடு ,துணிமணியோட விலை ஏறிகிட்டே இருக்கே!இதுக்கு அவரு அதிகமாச் செலவு செய்ய வேண்டியிருக்கே!
ஏன்தான் இந்த விலைவாசி ஏறுது என்ற கேள்வி மண்டையைப் பிராண்ட ஆரம்பித்தது.மனுஷனுக்கு தேவையான
உணவுப்பொருள் விலை ஏறிகிட்டே போகுது.விலை ஏறுனா அதை தயாரிக்கிறவனுக்கு நிறைய லாபம் கிடைக்கனுமில்லையா?
ஆனா காய்கறி ,அரசி ,பருப்பை உற்பத்தி செய்ற விவசாயி ஏழையாத்தான் இருக்குறான் .விவசாயிகிட்ட குறைஞ்ச விலையில
வாங்கி ,நம்மகிட்ட அதிக விலைக்கு வித்து கொழுத்த லாபம் சம்பாதிச்சுடுறாங்க சில பேரு.

உணவுப்பொருள்தான் இப்படி பிரச்சினைன்னா,முடிவெட்டுறது,பென்சிலு,பேனா,பேப்பருன்னு எல்லாமே விலை ஏறிகிட்டே போகுது.
இப்படி எல்லா பொருளோட விலை,ஏத்தத்துக்கும் காரணம் நிலத்தோட விலை ஏறுனதுதான்னு தோணுது.முடி வெட்டுற கடைக்கும்
இடம் வேணும்.அது ஏற ஏற எல்லாமே ஏறுதுங்கிறது தெளிவா தெரியுது.

சரி எடத்தோட விலை ஏன் ஏறுது ?பொருளாதாரம் வளருதுங்குறோம்.எல்லாரும் வேலைக்குப் போறோம்.எல்லாரும்
சம்பாதிச்சு ஒரு இடத்தை வாங்கிப் போட்டறனுமுன்னு இடத்தை துரத்தி துரத்தி வாங்கி விலையை ஏத்துறோம்.
வேலைக்குப் போற நாமளே விலைவாசி ஏறுனா கூலியை கூட்டிக் கேக்குறோமே!முதலீடு போட்டுத் தொழில்
செய்ற பண்றவன் என்ன நமக்கு சளைச்சவனா?நாம ஒரு ரூபா கேட்டா அவன் பத்து ரூபா விலையை ஏத்திக்கிறான்.
நாம விலைவாசி ஏறுதுன்னு புலம்புறோம்.கடனை வாங்கி இடத்தை வாங்குறோம்.இடத்து விலை ஏறுது.அதனால வாடகை
ஏறுது.தொழில் பண்ண முதலீடு அதிகமாப் போடவேண்டியிருக்கு .அதனால விலைவாசி ஏறுது.அதனால பணவீக்கம் அதிகமாகுது.
பணவீக்கம் அதிகமானதாலே வட்டி ஏறுது.வட்டி ஏறுனா நாம வாங்குன வீட்டுக் கடனோட தவணை ஏறுது.நமக்கு கழுத்து இறுகுது.

நம்ம கழுத்துல இந்த சுருக்கைப் போட்டது யாருங்க?ஒருவேளை நாமளேதானோ என்னவோ !
நிலத்தோட ஏற்றத்தை ஏதாவது பண்ணலைனா ,சராசரியா 65வருஷத்துல மனுஷனை ஜெயிக்கிற மண்ணு,ரொம்ப சீக்கிரமாவே
ஜெயிச்சுடுமோன்னு பயமா இருக்குங்க.
                                                                    நன்றி நாணயம் விகடன்!

Friday, July 20, 2012

நாட்டு நடப்பு (இந்தியா )

ஜனாதிபதி கலாட்டா !
ஒருவழியாக ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு வந்திருக்கிறது .மம்தா கடைசி நேரத்தில்
இப்படி மனம்மாறுவார் என்பதை காங்கிரஸ்சே அறிந்திருக்காதோ என நினைப்பது போல ,பிரணாப்பின் முகம்
 மேலும் மகிழ்ச்சியடைந்ததை பார்க்க முடிந்தது .அதே சமயத்தில் ,சங்மாவின்
எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிறது.
அவரை முதலில் ஆதரித்த ஜெயலலிதா .சங்மாவுக்கு
எதுவும் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..இந்த களேபரத்தில் முலாயம்சிங் ,சங்க்மாவுக்கும்
ஒரு குத்து ,பிரனாப்புக்கும் ஒரு குத்து என்று ஓட்டுச்சீட்டில் மாற்றி மாற்றி குத்தியது
ஒரு கலகல அரசியல் தமாஷ்தான் .அடுத்ததாக துணைஜனாதிபதி தேர்தல் களமும்
சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஹமீது அன்சாரியும்,பாஜக சார்பில் ஜஸ்வந்த்சிங்கும்
போட்டியிடுகிறார்கள்.அன்சாரிக்கே தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வாய்ப்பு அதிகமென சொல்லப்படுகிறது..
துணை ஜனாதிபதி பதவி ,ஜனாதிபதி பதவி போன்றே முக்கியமில்லாத ஒன்றாக கருதப்படுவதால் ,இதில் தோற்றாலும் பாஜகவுக்கு
பின்னடைவு இல்லை என்பதே நிதர்சனம்.


தமிழ் ஈழமும்,தமிழக அரசியல் கட்சிகளும் !கடந்த இரண்டு மாதமாக ,தனித்தமிழ் ஈழம் என்ற கோஷத்தை முன்வைத்து
அரசியல் வித்தையை நடத்திக்கொண்டிருக்கிறார் கருணாநிதி.டெசோ மாநாடு நடத்தி
தமிழ் ஈழ விதையை மீண்டும் தூவுவேன் என்று முதலில் சொன்ன கருணாநிதி.இப்போது
தன் நிலையை மாற்றி (எத்தனை முறை,தன்  நிலையை மாற்றினார் என்பதை கணக்கில் வைக்க முடியவில்லை )
தனி ஈழ கொள்கையை இப்போது பரப்ப விரும்பவில்லை என்பதை சொல்லியிருக்கிறார்.
இப்போது இதையும் மாற்றி,தமிழ் ஈழ கொள்கையை நான் கைவிடவில்லை,இப்போதைக்கு அந்த எண்ணமில்லை
என்று யாருக்கும் புரியாத வண்ணம் மீண்டும் குழப்பியடித்து இருக்கிறார்.

இதனிடையே ,இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்கு போராடும் தமிழக கட்சிகள்,தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும்
இலங்கை தமிழ் அகதிகளை ,கண்டுகொள்ளாமல் இருப்தை அறிய முடிகிறது.சமீபத்தில் மண்டபம் முகாமில் ,
மூன்று குழந்தைகளுக்கு தாயான ,ஈழ தமிழச்சியை ,வன்புணர்வு செய்ய முயற்சித்து இருக்கிறார் காவல்துறை அதிகாரி ஒருவர்!
இதைக் கண்டிக்க வைகோவும் முன்வரவில்லை,கருணாநிதியும் முன்வரவில்லை.இலங்கை அகதிகளை கொத்தடிமைகள் போலத்தான்
இன்றுவரை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது ,யாருக்கும் தெரியாமல் இருக்கவில்லை.அவர்களுக்கான அடிப்படை வசதிகள்
செய்து தர,இதுவரை எந்த தமிழினத் தலைவர்களும் கடிதம் எழுதாமலிருப்பது வியப்பின் சரித்திரக் குறியீடுதான் .
பெண்களின் மீதான வன்முறை வாரம் !

கடந்த வாரம் முழுக்கவே பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் மற்றும் சித்திரவதை செய்திகளை 
பார்க்க முடிந்தது.அதில் குறிப்பிட்ட சம்பவமான அசாமில் நடைபெற்ற 
பாலியல் வெறியாட்டம்தான் .இளம்பெண்ணை 20பேர் கொண்ட கும்பல் மானபங்கப்படுத்தப் பட்டதை
தொலைக்காட்சி நிருபர் படம்பிடித்து உலகிற்கு காட்டியிருக்கிறார்.இருபது பேர் கொண்ட கும்பலை 
பிடித்ததாக சொல்லும் அசாம் அரசு,அந்த நிருபரையும் இப்போது கைது செய்திருக்கிறது.அந்தப் பெண்ணை காப்பாற்ற 
போகாமல் ,படம் பிடித்தாதாக கூறி வழக்கு போட்டிருக்கிறது அசாம் காவல்துறை..அந்த நிருபரை ஏதோ சூப்பர்ஹீரோவாக 
நினைத்துவிட்டார்கள் போல.இருபது பேர் கொண்ட கும்பலை ,ஒரே ஆள் புரட்டிப் போடும் வித்தையை தெரிந்துவைத்திருக்க 
வேண்டாமா என காவல்துறை இப்போது கேட்கிறது.

இந்தக் கேள்வியை அசாம் காவல்துறை கேட்டபோதே ,வழக்கு எந்த திசையில் பயணிக்கப்போகிறதென்பதை அறிய முடிகிறது.
வாழ்க ஜனநாயகம் என்ற கோஷத்தை இப்போது சொல்லத்தோனுகிறது!UNLEASHED (ஆக்சன் சினிமா )


அடிமை போல வளர்க்கப்பட்ட ஒருவன் ,அடிமைத்தனத்திலிருந்து வெளியே வரும் ஆக்சன் கதை இந்த UNLEASHED

பாப் ஹிஸ்கின் என்ற கந்துவட்டிக் கும்பல் தலைவன்,வசூல் செய்வதற்காக அடியாள் ஒருவனை சிறுவயதிலிருந்தே (டேனி)
நாயை போல் கட்டி வைத்து வளர்க்கிறான் .யார் பணத்தை திருப்பி தராமல் இருக்கிறார்களோ ,அவர்கள் மீது
இவனை விட்டு அடிக்கச் சொல்கிறான்.டேனிக்கு அடிப்பதை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.ஒரு சமயத்தில்,கந்துவட்டி தலைவனை
எதிராளிகள் அடிக்கும்போதும்,அவனுக்கான கட்டளை வரவில்லை என்பதால் ,அடிக்காமல் இருக்கிறான் .இதைக் கண்டிக்கும்
கந்துவட்டி தலைவன் (பாப் ஹிஸ்கின்) அவனை திட்டுகிறான் .

இதனிடையே வசூல் செய்யும் இடத்தில் ,பியானோ கற்றுத்தரும் பெரியவரை சந்திக்கிறான்,அவனுக்கு பியானோ மேல்
ஆசைவருகிறது,அந்தப் பெரியவரும் அவனுக்கு பியானோ கற்றுத்தர ஆசைப்படுகிறார்.கந்துவட்டிக் கும்பலின் அட்டகாசத்தால்,எதிராளிகள்
அவர்களை காரோடு வைத்து சுடுகிறார்கள்.அதிலிருந்து தப்பிக்கும் டேனி ,பியானோ கற்றுத்தரும் பெரியவரிடம் அடைக்கலம் ஆகிறான்.
பெரியவரின் வீட்டில் ,பெரியவரின் வளர்ப்பு மகளான விக்டோரியாவை சந்திக்கிறான்,விக்டோரியா  அவனுக்கு எல்லாவற்றையும்
சொல்லிக்கொடுக்கிறாள்.


இதனிடையே ஷாப்பிங் செல்லும் டேனி,கந்துவட்டிக் கும்பல் ஆட்களின் பிடியில் சிக்கிக்கொள்கிறான்.விருப்பமே இல்லாமல் செல்லும்,அவனுடைய தாயாரை
பற்றி கந்துவட்டிக் கும்பல் தலைவனிடம் கேட்கிறான்.அவனுடைய தாய் ஒரு விபச்சாரி என்று பொய் சொல்லி ,அவனை அடைக்கிறான்.மீண்டும் டேனியை வைத்து
அடிதடி சண்டையில் விட்டு ,பணம் பார்க்கிறார்கள்.இது பிடிக்காத டேனி,அங்கிருந்து தப்பி ,மீண்டும் பியானோ விற்கும் பெரியவரிடம் போகிறான்

அவருடன் சேர்ந்து ,அவனின் அம்மாவைப் பற்றி விசாரிக்கிறான்.அப்போதுதான் அவனுடைய அம்மா விபச்சாரி இல்லை ,பியானோ டீச்சர் என்பதை
அறிந்துகொள்கிறான்.அவனுடைய அம்மாவை கொன்றது ,கந்துவட்டிக்கும்பல் தலைவன்தான் என்பதை அறிந்துகொள்கிறான்.கந்துவட்டித் தலைவனின் ஆட்களும்
டேனியைத் தேடி வர ..அவர்களிடம் இருந்து எப்படி மீள்கிறான் என்பதை சண்டைக்காட்சிகளை இறைத்து சொல்லியிருக்கிறார்கள்.பாதி நேரம் ஆக்சனாகவும்,மற்றொரு பாதி டிராமாவாகவும் படத்தை எடுத்திருக்கிறார்கள்.விக்டோரியா டேனிக்கு சாப்பிட
சொல்லிக்கொடுக்கும் காட்சி ரசிக்க வைக்கிறது .தமிழ் டப்பிங்கிலும் இந்தப் படம் வந்திருக்கிறது.டாரன்ட்டில் தேடி பார்த்துக்கொள்ளலாம்.ஆக்ஷனில் அசத்தும்
டேனிக்கு எதுவுமே தெரியாமல் ,தலையை கவிழ்த்துகொள்ளும் கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருகிறார்.

UNLEASHED - ஒரு முறை பார்க்கலாம்
LOCKOUT (பிரெஞ்ச் ஆக்சன் திரைப்படம்!)


விலாவரியாக சொல்ல நேரம் வாய்க்காததால் சுருக்கமாக சொல்ல முயல்கிறேன்!

கதை 2079ம் ஆண்டு நடக்கிறது .கொடும் குற்றவாளிகளை விண்வெளியில் கூடம் அமைத்து.
ஒவ்வொரு குற்றவாளிகளையும் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.இதுசம்பந்தமாக அமெரிக்க பிரெசிடென்டின்
மகள்,விண்வெளி சிறைக்கூடத்திற்கு வந்து ,சிறைக்கைதியிடம் இந்த புதியமுறையை பற்றி விசாரிக்க முயல்கிறார்.
எதிர்பாராதவிதமாக சிறைக்கைதி ,அங்குள்ள அதிகாரிகளை சுட்டு,அமெரிக்க பிரெசிடென்டின் மகளையும்,அங்குள்ள அதிகாரிகளையும்
பிணைக்கைதியாக வைத்துக்கொள்கிறார்கள்.

பிரெசிடென்டின் மகளை காப்பாற்ற வேண்டி ,பூமியில் உள்ள அதிகாரிகள் முயற்சிக்கிறார்கள்.அதற்காக ஸ்நோ(அமெரிக்காவை உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட ) என்ற
ஒருவனை விண்வெளிக்கு அனுப்புகிறார்கள்.ஸ்நோவுக்கும் அங்கே போனால்,அவன் மேல் விழுந்த பழியை துடைக்கலாம் என்பதால்
கிளம்புகிறான் ..அதன் பிறகு என்ன ஆனது என்பதை ஆக்சன் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.பிரெசிடென்டின் மகளாக வரும் நடிகையும்(எமிலி)
தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.தன்னை மட்டும் காப்பாற்றினால் போதுமென நினைக்காமல்,
அங்கு வேலை செய்யும் அமெரிக்கவாசிகளையும் காப்பாற்ற சொல்லி கேட்டு,மனிதாபிமானத்தை வெளிப்படுத்துகிறார்படத்தில் இடை இடையே பஞ்ச் டயலாக் போன்ற வசனங்களை ஆங்காங்கே தூவியிருக்கிறார்கள்.கேமேராவின் கோணங்கள் சுவாரசியப்படுத்துகிறது .வில்லன்களின் (சிறைக்கைதிகள்)அண்ணன்,தம்பி
பாசப்பிணைப்பும் படத்தில் மெலிதாக காட்டப்படுகிறது.ஒவ்வொரு பிணைக்கைதிகளை தம்பிக்காரன் சுடும்போது,அதை கண்டிக்கும் அண்ணன் ,
அவனை எதுவும் செய்ய மனம் வராமல் தவிக்கிறான்.பிரெஞ்சு பட இயக்குனர்கள்,தமிழ் சினிமாவை பார்க்கிறார்களோ என்ற சந்தேகம் வருவதை
தவிர்க்க முடியவில்லை.

லாக்அவுட் - ஆக்சன் பொழுதுபோக்கு!பிரபலமான பதிவுகள்