Loading

Thursday, August 31, 2017

திரைப்படமும் ,பிள்ளை பெறுதலும் !!!

ஒரு திரைப்படம்  என்பது,
பத்து மாதம் கஷ்டப்பட்டு பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு ஒப்பானது என ,இந்த வாரம் முழுவதும்
சொல்லி வைத்தாற் போல் அத்தனை பேரும் நமக்கு டியூஷன் எடுத்ததால்,
மனம் திருந்தி,மீண்டும் லிப்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற காவியத்தை பார்த்தேன்.

முதல் முறை இந்த படத்தை பார்த்தபோது,
இந்த படத்துல நடிச்சவனை எல்லாம் பெத்ததுக்கு பதிலா,செக்கண்ட் ஷோ படத்துக்கே போயிருக்கலாமேடா என தோன்றியது.
ஆனால் இப்போது அப்படி இல்லை,
அந்த சமயத்திலும்,
சில அறுவைப் படங்கள்.வந்து தொலைத்ததால் நேர்ந்த விபத்தென மனதை தேற்றிக்கொண்டேன்.

மூன்று விதமான கெட்டப்புகளில்,
சிம்பு கஷ்டப்பட்டு ,தன்னை வறுத்திக்கொண்டு உடம்பை வளர்த்துள்ளார்.இந்த படத்திற்க்காக
செனைப் பன்னி போல உடம்பை மாற்றிக்கொள்ள நாள்.முழுவதும் பீர் அடித்து உழைத்திருக்கிறார் போல.
அவ்வளவு அருமையான தோற்றம்.

இந்த படத்தின் திரைக்கதை கொஞ்சம் வித்தியாசமானது.பிரபல இயக்குனர்
க்ரிஸ்டோபர் நோலன் இயக்கிய மெமெண்டொ படத்தின் திரைக்கதையை எல்லாம் மிஞ்சிய திரைக்கதை இது.
என்ன நடக்கிறதென நமக்கு சாகும் வரை கூட புரியாது என்பதுதான் ,இந்த குழந்தையின்(படத்தின்)மிகப்பெரிய டியுப்லைட் ச்சி ஹைலைட்.

கனவு உன்னி ச்சி கனவுக்கன்னி ஸ்ரேயா,தமன்னா போன்றவர்களுக்கு தலையெழுத்து நன்றாக இருக்கிறது போல.அதனால் தான் இந்த மகா காவியத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.அதை வெட்டியாக  கெட்டியாக பிடித்து சாதித்திருக்கிறார்கள்.

படத்தின் இடையில் ஆஸ்கார் நடிகர் ஜி.வி பிரகாஷ் வேறு கவுரவ? தோற்றம் கொடுத்து நம்மை இ(து)ன்பப்படுத்தி வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் இந்த திரைப்படம்,
நம்மை காப்பாற்ற வந்த எடப்பாடி அரசை போல செம்மையாக இருக்கிறது.
கடைசியாக ஒன்றை சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.
இந்த படத்தில் நடித்த உச்சா நடிகர்,ச்சி உச்ச நடிகர் சிம்பு அவர்கள்,
விவேகம் படத்தை பாராட்டி
பேசியிருப்பதை அறிந்தேன்.
அந்த படத்தையும் மீண்டும் பார்த்து சாக
(சம் செய்ய) ஆவலாக இருக்கிறது.

Saturday, August 12, 2017

குருவியார் டார்ச்சர்கள் !!

தினத்தந்தியில் ஞாயிறு தோறும்,
குருவியார் கேள்வி பதில் தொடரை பிரசுரித்து வருகிறார்கள்.
அதில் கேட்கப்படும் கேள்விகள்,
மிகவும் வித்தியாசமானது.கடும் சோம்பேறி கூட
இப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள் .
உதாரணத்திற்கு,

திரிசா காலையில் குடிப்பது காபியா?
டீயா ?

நயன் தாரா என் கனவில் வருவாரா மாட்டாரா ?

ரஜினி எப்போதுதான் அரசியலுக்கு வருவார் ?

இப்படிப்பட்ட மொன்னை கேள்விக்கு,
குருவியாரும் பக்கத்தை நிரப்பும் விதமாம மொக்கையாக பதிலளித்திருக்கும்.
இதை தெரியாத்தனமாக ,படிக்க ஆரம்பித்தால் கூட மண்டையில் சுர்ரென்று ஏறுமளவுக்கு பதில்கள் அமைந்திருக்கும்.

நான் தினத்தந்தியிடம் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

ஞாயித்துக்கிழமை லீவு வேணும்னா எடுத்துக்கோங்கடா!இப்படி எதையாவது கிறுக்கி எங்களை கிறுக்காக்காதிங்கடா.

தமிழகத்தில் சர்வதேச உளவு அமைப்புகள் !

முந்தாநேத்து நம்முர்ல அமெரிக்க காரன் ஒருத்தனை பார்த்தேன்,
மும்மரமா பேப்பர்ல நோட்ஸ் எடுத்துட்டு இருந்தான்,
ஏதோ அட்ரஸ் எழுதுவான் போலனு
நினைச்சு மறந்துட்டேன்,.
நேத்திக்கு கொரியாகாரன் ஒருத்தனை பார்த்தேன்,அவனும் சுத்தி முத்தி பார்த்துட்டு,எதையோ நோட்ல எழுத ஆரம்பிச்சான்,இவனும் அட்ரஸ்தான் எழுதுவான் போலனு நினைச்சு விட்டுட்டேன்,
ஆனா ,இன்னிக்கு காலையில ,
ரோட்டை கிராஸ் பண்ணும்போது,
சீனாகாரன் ஒருத்தனை பார்த்தேன்.
அவனும் கைல நோட்டை வச்சுகிட்டு,
சின்சியரா எழுதிட்டு இருந்ததை பார்த்தப்போதான் எனக்கு திக்குனு ஆகிடுச்சு.

அடப்பாவிங்களா..
ஓவியா ஆர்மி ,ஓவியா ஆர்மினு கூவி,
ஏதோ ராணுவ புரட்சிதான் நடக்குது போலனு,
உலக நாட்டுல உள்ள அத்தனை பேரையும் ,இங்க வந்து உளவு பார்க்க வச்சிட்டீங்களேடா.

ஆங்கில ஆசான் !!!!

ஆங்கிலப் புலமைக்கு
ரெபிடெக்ஸ்,
ஆக்ஸ்போர்டு டிக்‌ஷனரி,
The Hindu ,
ஹாலிவுட் படங்களென
ஊரே போட்டிபோட்டுக்கண்டு கற்றதை
பார்த்து மிரண்டு போன எனக்கு
சுலபமாக ஆங்கிலம் கற்றுக் கொடுத்த
பேராசான் அவர் .

ஆங்கில கான்வோ
புத்தகங்களை விட சிறந்த உரைநடையை
அசால்டாக பேசி பழகவைத்த
சிறந்த மொழிபெயர்ப்பாளர் அவர்.இப்போது கூட
இண்டெர்வீவ்க்கோ,
கருத்தியல் மாநாட்டுக்கோ,
அல்லது பெண்களிடம் பீட்டர் கடலை விடுவதற்கோ
எங்காவது ஒருவன்
அவரை ரெபரன்ஸ் செய்துகொண்டிருப்பான் .

What a beautiful ground ?
என்ன ஒரு அழகான மைதானம்

Yes ,you are right
ஆமா,நீங்க சொன்னது சரிதான்

What happening here ?
இங்க என்ன நடந்துட்டு இருக்கு ?

என ஆங்கில வாக்கியத்துக்கு
அடுத்த நொடியே
தமிழில் மொழிபெயர்த்து
கடைக்கோடி கிராமத்தானுக்கும்
கலிஃபோர்னியா ரக ஆங்கில
ஸ்லாங்கை ,அடித்து விளையாட  கற்றுத்தந்த ,பேராசான் நடிகர் மேஜர் சுந்தர்ராஜன் (கமெண்ட் பாக்சில் காட்சியளிப்பார் )அவர்களுக்கு
என் கோட்டான கோட்டி தேங்ஸ்கள் .

Saturday, August 5, 2017

குழாயடி வீராங்கனைகள் !!

புதிதாக தண்ணீர் பிடிக்க வரும்
இளம் பெண்கள் ,
குழாயடி சண்டையை
பார்த்து மிரண்டு ஓடுவார்கள்,
இப்போதெல்லாம் அப்படி இல்லை, முதல்நாளே குழாயடி சண்டையில்,
தாமாகவே முன்வந்து அடி பின்னுகிறார்கள் .

எப்படி இந்த திடீர் புரூஸ்லி எபக்ட்
வந்ததென,ஏரியாவில் உள்ள முன்னாள் குழாயடி வீராங்கனைகள் ,குடத்தை சுற்றி குழு அமைத்து யோசிக்க ஆரம்பித்தார்கள்.

நம்மை போட்டு இப்படி பந்தாடுகிற பிஞ்சுகள் எதுவும் கராத்தே கிளாஸ் போகிறார்களா என பார்த்தால் ,அதுவுமில்லை.

சாயங்காலம் ஆனால்,தமிழ்  சீரியல்கள்
பார்த்து,வன்மம் வளர்க்கிறார்களா என பார்த்தால்,மழைக்கு கூட டிவி சீரியல்கள் பக்கம் யுவதிகள் ஒதுங்குவதில்லை.

புதிதாக முளைத்த "ஓவியா ஆர்மியில்"
உறுப்பினர்களா என பட்டியலில் தேடி பார்த்தும் பதில் கிடைக்கவில்லை.
பிறகு எங்குதான் குழாயடி சண்டைக்கு பயிற்சி எடுத்தார்கள் என ,ஏற்கனவே கலைந்து போயிருந்த தலையை,
மேலும் பிய்த்துக்கொண்டிருந்த நேரத்தில்தான்,

எக்ஸ்கியூஸ்மீ ,ஒன் குடம் வாட்டர் ப்ளீஸ்
என கேட்டுவந்த என்னை, முன்னாள் குழாயடி வீராங்கனைகள் ஏறிட்டு பார்த்தார்கள்.இவண் நமக்கு சரிப்பட்டு வருவான் என யோசித்தார்களோ என்னவோ,
ஒரு குடம் தண்ணி எடுக்க அனுமதி தர்றோம்,பதிலுக்கு நாங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்வியா என
பேக்கரி டீல் வைத்தார்கள்.
பயங்கர தன்ணீர் பஞ்ச சூழலில்
எனக்கும் அந்த டீல் ,கொஞ்சம் சுலபமாக தெரிந்ததால் தலையாட்டினேன்.

சாந்தமாக இருந்த நம் ஏரியா யுவதிகள் ,விஜயசாந்தித்தனமாக மாறிய கதையை என்னிடம்
புரியும்படி விளக்கினார்கள்.

ப்பூ..
இவ்வளவு தானா மேட்டரு,
இதுக்கு போயா 11பேர் கொண்ட குழு போட்டு யோசிச்சீங்க என மட்டம் தட்ட ஆரம்பித்ததில்,அவர்களின் கை முறுக்கேறியிருந்தது.

சரி..ஷோல்டரை இறக்குங்கக்கா..
பதிலை சொல்றேன்..
என சமாதானப்படுத்தி,
அவர்களின் கையில் என் மொபைலை கொடுத்தேன்.

அதில் "பேஸ்புக் " டைம்லைன் ஓடிக்கொண்டிருந்தது.

பிரபலமான பதிவுகள்