Loading

Friday, July 27, 2012

மிருணாள்சென்(Mrinal sen)


இந்திய சினிமா ,தனது நூற்றாண்டை கொண்டாடும் இந்த வேளையில்,
அதன் பிதாமகர்களில் ஒருவரான ,மிருணாள்சென் 90வயதை எட்டியிருக்கிறார்.அவருடைய
கை பிடித்து நடை பழகியதுதான் இந்திய சினிமா என்று சொல்லலாம்.80களில் வேலைக்குச்
செல்லும் ஒரு பெண் ,இரவில் வீட்டுக்குத் திரும்பாமல் ,அடுத்த நாள் காலை வந்து தன்னுடைய தினசரி,அலுவல்களைத்
தொடர்ந்துகொண்டு இருப்பாள்.அவளிடம் எந்தவொரு மாற்றமும் தென்படாது.அவளைத் தேடி இரவுமுழுக்க
ஊரெல்லாம் அலைந்த குடும்பமோ,பேயறைந்துகிடக்கும்.
"ஏக் தின் பிரதி தின்" படத்தில் இப்படியொரு காட்சியைவைத்து,நம் வீட்டுப் பெண்கள் மீது நமக்கே நம்பிக்கை இல்லை
' என்று சமூக குற்றவுணர்வுகொள்ளச் செய்தவர்."புவன் ஷோம்" படத்தில் 50  வயது நபரை நபரை 20 வயதுப் பெண்
காதல் கொள்வது  போன்ற கலாசார அதிர்வுகளை ஏற்படுத்தியவர்.சிதைந்த கட்டடத்தில் சிரமத்தில் வாழும்
ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையையும் இடிபாடுகள் சூழ்ந்து நிற்கும்
சோகத்தைச் சொல்லும் "காந்தர்" படத்தின் உருக்கத்தை வார்த்தைகளில் வடித்துவிட முடியாது.மிருணாள் சென்னின்
"மிடாஸ் டச் "சுடன் வெளிவந்த படங்கள் அனைத்துமே புதிய அலை சினிமாக்கள்தான்.

"மிருணாள் டா" என்று அன்புடன் அழைக்கப்படும் மிருணாள்சென் கல்கத்தா பல்கலைக்கழக மாணவராக
இருந்த காலத்தில் ,கம்யுனிஸ்ட் கட்சியின் கலாசாரப் பிரிவில் தொண்டரும்கூட.

ஆரம்பத்தில் "மெடிக்கல் ரெப்" ஆகச் சில காலம் அலைந்துவிட்டு பிறகு ,ஆடியோ டெக்னிஷியனாக சினிமாவில்
சேர்ந்தார் சென்.1955-ல் சாதாரண நடிகராக இருந்த உத்தம் குமாரை நாயகனாகக்கொண்டு ராட்போர் என்ற படத்தை
என்ற படத்தை இயக்கினார் சென்.படம் ஓடவில்லை,அடுத்து நீல் "ஆகஷெர் நீச்சே "என்ற படத்தை இயக்கினார்,
இந்தியாவின் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் இறுதித் தருணங்களில் ஓர் ,இந்தியப் பெண்ணுக்கும்,புலம்பெயர்ந்த
சீனக் கூலிக்கும் இடையிலான அன்பைச் சொல்லும் அந்தப் படத்தின் பின்னணியில் அரசியல் நெடி தூக்கலாக
அமைந்திருந்தது.இதனாலேயே, இந்திய அரசாங்கம் தடை செய்த முதல் படமானது அந்தப் படம்.
இரண்டு வருடங்களுக்கு இந்தத் தடை நீடித்தது,அடுத்தடுத்தும் அரசியல் பேசும் படங்களையே இயக்கினார் மிருணாள்சென்.

மிருணாள்சென்னின் படத்தை தடை செய்த ,அதே இந்திய அரசுதான் 1964-ல் இந்தியாவின்
5000 ஆண்டு கால வரலாற்றை ஆவணப் படமாக எடுக்கச் சொல்லி அவரிடமே வந்து நின்றது .'மூவிங் பெர்ஸ்பெக்டிவ்ஸ்'
என்று தலைப்பிட்டு அந்தப் படத்தை இயக்கினார்.ஃபனா, 'தோபி காட்' கஹானி போன்ற சமீபத்திய படங்களில் கதை நிகழும் நகரங்களும் கதாபத்திரமாகின.
இப்படியான படங்களுக்குப் பாதை அமைத்தது சென்தான்.அவருடைய "இன்டர்வியு" "பதாதிக்" "மஹாபிரித்வி"
போன்ற பல படங்களில் கொல்கத்தா ஒரு கதாபாத்திரமாகப் படம் முழுக்க நிறைந்திருக்கும்.சென்னின் முதல் படத்தில்
நடித்த உத்தம்குமார் ,பிறகு வங்காள சினிமாவின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.ஆனால் சென்னுக்கு எப்போதும்
ஹீரோக்கள் தேவைப்பட்டதே இல்லை,கதைதான் அவருக்கு ஹீரோ .

தேர்ந்த வாசிப்பு அனுபவம் மிக்கவராக இருந்ததால்தான் புகழ்பெற்ற வங்காள எழுத்தாரும் ,சென்னின் நண்பருமான
சுபோத் கோஷின்"கோத்ரண்டா" கதையை "ஏக் அதூரி கஹானி'என்ற படமாக எடுக்க முடிந்தது.
நமக்கு துயரத்தை ஏற்படுத்துகிற எதிரிகள் வெளியே இருக்கிறார்கள் என்று மற்ற இயக்குனர்கள் படங்களை
மையபடுத்திக்கொண்டு இருந்த போது,உண்மையான எதிரி நமக்கு உள்ளேயே இருக்கிறான். என்று சொல்லி,மத்திய தர
வர்க்கத்தின் உலகம் ,அதனுடைய விருப்பு ,வெறுப்புகள் போன்றவற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சியவர் சென்.இந்திய சினிமா
இவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட மிக முக்கியமான 'கிரியேட்டிவ்'பார்வை இது.இவரின் பல படங்களை
பெர்லின்,வெனிஸ்,மாஸ்கோ,சிகாகோ,கெய்ரோ என பல உலக அளவிலான திரைப்பட விழாக்களில்
திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வென்றிருக்கின்றன.இவருடைய 'காந்தர்"திரைப்படம் மட்டுமே 1984 மற்றும் 2010
ஆகிய வருடங்களில் கேன்ஸில் இரண்டு முறை திரையிடப்பட்டு இருக்கின்றன.ஓர் இயக்குனரின் பெருமையை உணர்த்த
இதைவிட வேறென்ன அங்கீகாரம் வேண்டும் .

"இன்று என்னிடம் ஐந்து கோடி ரூபாய் கொடுத்து படம் இயக்கித் தரக் கேட்கிறார்கள்.அந்தப் பணத்தில் நான் ஐந்து
படங்கள் எடுத்து விடுவேன்" சமீபத்தில் நடந்த அவரின் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் இப்படிச் சொல்லிச் சிரித்திருக்கிறார் சென்.
திரைப்பட இயக்குனர்கள் எல்லாம் சமூக விஞ்ஞானிகளாகவும் இருக்க வேண்டும் என்று எப்போதும் தன்
மாணவர்களிடத்தில் சொல்வார் சென்.சொல்வதோடு மட்டும் அல்லாமல் ,தன் சொற்களுக்கு ஏற்றபடியே
வாழ்ந்துவருகிறார் என்பதுதான் மற்றவர்களிடத்தில் இருந்து மிருணாள்சென்னைத் தனித்துவப்படுத்துகிறது.

                                                                                               நன்றி ஆனந்தவிகடன் !
No comments:

Post a Comment

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்