Loading

Saturday, July 15, 2017

உன் அண்ணன் என்னை காதலிக்கிறான்

என்னை நீண்ட நாளாக ஒருவன் டார்ச்சர் செய்கிறான்.நான் எங்கு சென்றாலும்,என்னை பின் தொடர்கிறான்.எப்போதும் என்னை சுற்றியே வருகிறான்.
அவன் வேறு யாருமல்ல,உன் அண்ணன் தான்.இதைக் கேட்டு ஆச்சர்யப்படாதே,
உன் அண்ணன் என்னை காதலிக்கிறான் என்கிற பேரதிர்ச்சியையும் கேட்டுவிட்டு ஆச்சர்யப்படு.

இந்த செய்தியை நீ நம்பாமல் இருக்கலாம்.ஆனால் உன்னை நம்பவைப்பதற்கு என்னிடம் ஏராளமான சம்பவங்கள் இருக்கிறது.

முதன் முதலில் உன்னிடம் காதலை தெரிவிப்பதற்கு ரோஜாவை கொடுத்தேன் இல்லையா,நீயும் வெட்கப்பட்டுக்கொண்டே வாங்கினாயல்லவா..
அன்றைய தினமே உன் அண்ணன்,
எனக்கு ரோஜா செடி புடிக்குமென்பதை தெரிந்துகொண்டு,ரோஜாக்கள் பிடுங்கப்பட்ட முள் செடியை,என் முதுகிலும்,மார்பிலும் ரோஜா நிறம் வருமளவுக்கு வருடி விட்டு சென்றான்.

நானும்..ஏதோ சிறுபிள்ளை,
அறியாமல் செய்துவிட்டதென,
நான்கு நாள் ஆஸ்பத்திரியில் ஹாயாக பெட் ரெஸ்ட் எடுத்துவிட்டு(அவ்வ்வ்,வலிக்குது நர்சம்மா) மறந்தே போய்விட்டேன்.

பிறகு ,உன்னுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே ,அவளும் நானும் பாடல் கேட்டோமே நியாபகமிருக்கிறதா?
பாடல் முடிந்ததும் நீ சென்றுவிட்டாய்,
நானும் கிளம்ப எத்தனிக்கையில்,
மீண்டும் அதே பாடல் ஒலித்தது.
அவனும் நானுமென பாடிக்கொண்டே என் முன் வந்து நின்றான் உன் அண்ணன்.

ஐஸ்க்ரீம் சாப்பிட்ட என் வாய் ,உன் அண்ணனுக்கு மிகவும் பிடித்திருக்கும் போல.ஐஸ் கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்குமளவுக்கு அன்பு செய்துவிட்டு போய்விட்டான்.

இதையும் பெருந்தன்மையாய் மறந்து,உன் காதல் மட்டுமே முக்கியமென கருத்தில்கொண்டு,
அன்றொரு அழகிய நாளில்,உன்னை கட்டிப்பிடித்தேன் அல்லவா.
அதையும் ஒளிந்திருந்து,உன் அண்ணன் பார்த்து தொலைத்துவிட்டான் போல.
ஒரு வித மோதல் வெறியுடன்,ச்சி காதல் வெறியுடன் என்னை கட்டிப்பிடித்து,
ரோட்டில் உருண்டு புரள ஆரம்பித்தான்.

டேய் என்னை விடுடா,நான் அந்த மாதிரி ஆள் இல்லைடா என கத்திப் பார்த்தும் பலனில்லை,காதல் வெறியில் என்னை கைமா பண்ணி தொலைத்தான்.

அந்த கொடும் சம்பவத்தை மறக்க முடியாமல் ,இருந்த நேரத்தில்,
நீ என்னை தனியாக அழைத்து ,
சத்தமில்லாமல் முத்தமிட்டு மறக்க வைத்தாயல்லவா.
இதையும் எப்படியோ தெரிந்துகொண்டு ,
என்னை முட்டுசந்தில் மடக்கி வைத்து,

"நீங்க என்ன ஆளுங்கடா "என வினோதமாக கேட்டான்,
அது தெரியாது பாஸ்,
"ஆனா சத்தியமா நான் உன் ஆள் இல்லைடானு "தான் சொன்னேன்.
இதைப் போய் தாழ்வுமனப்பான்மையில் ,அவமானமாக நினைத்து ,ஆளவந்தான் நந்து கமல் போல அரை ஆடையாக்கி,என்னை அழகு பார்த்தான்.(அவ்வ்)

இதையும் உனக்காக பொறுத்துகொண்டு,ஓர் இனிமையான வேளையில் ,உன்னுடன் நெருங்கிப் பழகி உச்சமாக நினைக்கையில்,
அசம்பாவிதமாக உன் அண்ணன் என்னை ஓரக்கண்ணால் சைட்டடித்து,
என் உச்சக்கட்டத்தை உச்சாக்கட்டமாக 
ஆக்கித் தொலைத்தான்.
இதை உன்னிடம் சொன்னால்,உன் அண்ணனை அப்பல்லோவுக்கு அனுப்பி விடுவாய் என்பதால் அதையும் மறைத்து தொலைத்தேன்.

உன் தலையில்,செல்லமாக தட்டினால் ,
பதிலுக்கு என் தலையில் பாறாங்கல்லை வைத்து தட்டுகிறான்.உன் கன்னத்தை கொஞ்சலாக கிள்ளினால்,என் கன்னத்தை எம்பாமிங் செய்து வைக்கிறான்.

இன்னும் சொல்லப்போனால்,
நான் உன்னை டச் செய்ததை விட,
உன் அண்ணன் என்னை டச் செய்து ,டிச் செய்ததுதான் அதிகம்.
அவ்வளவு டார்ச்சர் செய்கிறான்.
ஈவ் டீசிங் கேள்விபட்டிருப்பாய்,
ஆடம் டீசிங் கேள்விப்பட்டதுண்டா ?
உன் அண்னன் செய்வது அதுதான்.

என் நிலையை மகாத்மா காந்தி அறிந்திருந்தால்,
என்று ஓர் ஆண் பட்டப்பகலில்,
எந்த தொந்தரவுமின்றி நடக்கிறானோ,
அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தமென்று கவலையுடன் கூறியிருப்பார்.

இறுதியாக ஒன்றை சொல்கிறேன்.
உன் அண்ணனிடம் மறக்காமல் கூறிவிடு.எத்தனை முறை என்னை வழிமறித்து கேட்டாலும்,
எடப்பாடி மீது சத்தியமாக ,
நான் அவனை காதலிக்கவே முடியாது.

1 comment:

 1. அதான் எல்லாத்தையும் செய்து முடிச்சாச்சே. இன்னும் இதுக்கு மேல என்ன பாக்கி? காதலாவது கத்தரிக்காயாவது!

  நீ அடிக்கிற மாதிரி அடி, நான் அழுகிற மாதிரி அழுகிறேன் கதையாக உள்ளது.

  நல்லா எழுதி இருக்கீங்க.
  தொடரவும்.

  நன்றி.

  ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்