Loading

Tuesday, November 20, 2012

ஒரு கொலை (பல திருப்பங்கள் )


புதிதாக திருமணம் செய்துகொண்ட இந்திய இளம் தம்பதி ஹனிமூனுக்கு தென்னாபிரிக்கா சென்றபோது, அவர்கள் பயணம் செய்த கார் கடத்தப்பட்டு, கணவன் வெளியே தூக்கி எறியப்பட்டபின் மனைவி துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
தென்னாபிரிக்கர் ஒருவர், இந்த இந்திய இளம் பெண்ணை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டை உறுதி செய்துள்ளது தென்னாபிரிக்க கோர்ட். கொலையாளிக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், வழக்கில் ஒரு ட்விஸ்ட்.
இந்த கொலையை ஏற்பாடு செய்ததே, கொல்லப்பட்ட பெண்ணின் கணவர்தான் என்ற குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. அதாவது, கார் கடத்தப்பட்டது, கணவர் தூக்கி வெளியே எறியப்பட்டது எல்லாம் செட்டப். கொலை செய்த நபர், வாடகை கொலையாளி!
சினிமா போல உள்ளதா? ஆனால் நிஜம். ஒவ்வொரு போட்டோவாக பார்த்து வாருங்கள். சுவாரசியமாக இருக்கும். கீழேயுள்ள போட்டோவில் உள்ள பெண்தான் கொல்லப்பட்டவர். பெயர், ஆனி தீவானி. 28 வயது.
ஆனி தீவானி, இந்தியாவில் இருந்து சுவீடன் நாட்டில் குடியேறிய குடும்பத்தை சேர்ந்தவர். ஆண், ஷ்ரியென் தீவானி. 30 வயதான இவர், பிரிட்டனில் வசிக்கும் கோடீஸ்வர குடும்பத்தை சேர்ந்தவர். கீழேயுள்ள போட்டோ, அவர்களது திருமணத்தின்போது எடுக்கப்பட்டது. திருமணம் முடிந்து சில தினங்களில் ஹனிமூன் சென்றபோதே, ஆனி தீவானி கொல்லப்பட்டார்.
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய இவர்கள், வாடகை கார் ஒன்றில் ஏறி, தென்னாபிரிக்காவின் குகுலிது என்ற இடத்துக்கு சென்றனர். இந்த இடம் கொஞ்சம் அடாவடியான இடம். திடீரென இருவர் காரை மறிக்க, கார் நின்றது, காருக்குள் துப்பாக்கியுடன் ஏறிய இருவரும், காரை கடத்திச் சென்றனர்.
சிறிது தொலைவு சென்றதும், கணவனை வெளியே தூக்கி எறிந்துவிட்டு, மனைவியை மட்டும் காரில் கொண்டுபோய் சற்று தொலைவில் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர் கடத்தியவர்கள்.
கொலை நடந்து 3 தினங்களின் பின் கணவன் தீவானி கிளம்பி பிரிட்டன் சென்றுவிட்டார். அதன்பின் தென்னாபிரிக்க போலீஸ் கடத்தல்காரர்களில் ஒருவரை கைது செய்தனர். அவரது பெயர், ஸோலி மெங்கெனி.

ஸோலி மெங்கெனியை விசாரணை செய்தபோது, அவருடன் இந்த கடத்தலுக்கு வந்த கூட்டாளி யார் என்பது தெரிந்தது. குவாபே என்ற பெயருடைய அந்த நபரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் விசாரித்தபோது, ஹனிமூன் தம்பதியை காரில் அழைத்துச் சென்ற டிரைவரும் இதில் உடந்தை என்று தெரிந்தது. (அதுதான், இவர்கள் காரை மறித்தபோது, டிரைவர் காரை நிறுத்தினார்) இதையடுத்து டிரைவர் ஸோலா டொங்கோ என்பவரும் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட டிரைவரை விசாரித்தபோது அவர் கூறியதுதான், அதிரடி திருப்பம்.
“ஏர்போர்ட்டில் வந்து இறங்கிய ஹனிமூன் தம்பதிகளை பிக்கப் பண்ணி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றபோது, அவர்கள் சந்தோஷமாக இருப்பது போலவே காணப்பட்டார்கள்.  ஆனால், கணவன் என்னுடன் தனியாக டீல் ஒன்றை பேசினார்.
15,000 ரான்ட் (சுமார் 2,000 டாலர்) பணம் கொடுக்கிறேன். என் மனைவியை கொலை செய்ய வாடகை கொலையாளி ஒருவரை ஏற்பாடு செய்யுங்கள் என்றார் அவர். அதுதான், ஸோலி மெங்கெனியை ஏற்பாடு செய்தேன்” என்றார் இந்த டாக்சி டிரைவர்.

இந்த விபரம், தென்னாபிரிக்காவால், பிரிட்டிஷ் நீதி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது. தென்னாபிரிக்கா கோர்ட் பிறப்பித்த வாரண்டில், கணவன் தீவானி பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்தார்.
லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்ட தீவானி, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். தென்னாபிரிக்கா அரசு, வழக்கு விசாரணைக்காக இவரை தமது நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்தது. தீவானியின் வக்கீல், இவரை அங்கே அனுப்ப கூடாது என்று வாதிட்டார்.
இதற்கிடையே, தென்னாபிரிக்காவில் கைது செய்யப்பட்ட டாக்சி டிரைவர் குவாபே, தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். கொலைக்கு உடந்தையாக இருந்தது, துப்பாக்கி வைத்திருந்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தது.
“நான் கொலை செய்யவில்லை. எனது கையில் துப்பாக்கியும் இருக்கவில்லை” என்றார் அவர். அதையடுத்து, அவருக்கு 18 ஆண்டுகள் சிறைவாசம் வழங்கப்பட்டது.

இதற்கிடையே பிரிட்டனில், மற்றொரு திருப்பம். கணவன் தீவானி தென்னாபிரிக்காவுக்கு அனுப்பப்படுவார் என்ற நிலை ஏற்பட்டவுடன், அவர் தரப்பு மற்றொரு விஷயத்தை வெளியிட்டது. அது என்னவென்றால், இந்த தீவானி லேசாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பிரிட்டனில் சிகிச்சை எடுத்து வந்தார் என்பது.
இதையடுத்து அவர், பிரிஸ்டலில் உள்ள மனநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரிட்டனின் Mental Health Act at Fromeside Clinic நடைமுறைப்படி, இவர்மனநோய் மருத்துவ மனையில் பலத்த காவலுடன் தடுத்து வைக்கப்பட்டார். கீழேயுள்ள போட்டோவில், தீவானியின் தற்போதைய தோற்றம், அவரது திருமணத் தோற்றத்தில் இருந்து எந்தளவுக்கு மாறியுள்ளது என்பதை பாருங்கள்.


இதற்கிடையே தீவானியை தென்னாபிரிக்காவுக்கு அனுப்புவது தொடர்பாக பிரிட்டிஷ் அரசு முடிவு எடுத்தது. பிரிட்டிஷ் உட்துறை செயலாளர் தெரசா மே, தீவானியை தென்னாபிரிக்காவுக்கு அனுப்புவது என்ற உத்தரவில் கையெழுத்து இட்டார். அதற்கு அவர் கூறியுள்ள காரணம், “இந்த குற்றம் முழுமையாக தென்னாபிரிக்காவில் நடந்துள்ளது. கொலை நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்” என்பதுதான்.
தற்போது சிகிச்சை பெற்றுவரும் தீவானி, குணமடைந்தவுடன் தென்னாபிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.


நன்றி :விறுவிறுப்பு.காம் 

1 comment:

  1. படிக்கவே ஒரு மாதிரியா இருக்குங்க..புதிய செய்தி வேறு..அழகா பதிவா பண்ணி விளக்கி இருக்கீங்க.நன்றி

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்