Loading

Sunday, April 1, 2012

எம்.எஸ் சுப்புலட்சுமிக்கு வாலியின் இரங்கல் கவிதை


எம்.எஸ் .சுப்புலட்சுமி காலமான போது ,வாலி எழுதிய
உருக்கமான கவிதை ஒன்று !

நடுத்தமிழ் நிற்கிறது
நடுத்தெருவில் ....
தன் விலாசத்தை
தவறவிட்டு ; அதன் -
திருவிழி உகுக்கிறது
தீர்த்தச் சொட்டு !



எம்.எஸ்
ஏறிவிட்டார் வாகனம் ;
எல்லோர்க்கும் இருந்தென்ன ?
எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்!

இழந்து நிற்கிறது
இசைக்கலை -
தான்
தங்கியிருந்த -
எம்.எஸ்
என்னும் இன்ஷியலை!

ஓதம்சூல் உலகின்காண்-
ஓர்
ஒப்புலட்சுமி-இல்லாதவர்
சுப்புலட்சுமி ;
தூய வாய்மலரால்-
இசைத் தேனைத்
துப்புலட்சுமி

என்னணம்
எண்டிசை-இனி
பயணிக்கக் கூடும் -நம்
பண்டிசை?

எம்.எஸ்
என்பது
சங்கீத
சாஸ்திரத்தின்
பெண்முக வடிவு ;இப்-
பெண்முக வடிவைப் பெற்றது -வீணை
சண்முகவடிவு !

வீணை சண்முகவடிவு-இவ்
வையத்தை..
விரல்வழி
வென்றார் ;அவரது
குலக்கொடி சுப்புலட்சுமி
குரல்வழி வென்றார் !

அம்புவி மேல்
அவர்போல் -
ஆர்க்கும்
அமைந்ததில்லை தொண்டை;
அக்தேபோல்
அவர் போல்
ஆரும்
ஆற்றியதில்லை ..
தொண்டை வழியாகப்-பொதுநலத்
தொண்டை !

கிருதி;
சுருதி;
இவை
இரண்டும் -
அவரை
அண்டியிருந்தன
தமது
தாயெனக் கருதி
ஒருவரும் கண்டதில்லை -அவை
ஒன்றோடு ஒன்று பொருதி ;
இலயத்தை-
இராகத்தை-
சிவப்பனுவாய் வெள்ளையனுவாய்
சுவீகரித்துக் கொண்டிருந்தது ..
எம்.எஸ் ஆக்கையுள்
எங்கனும் சஞ்சரித்த குருதி !

என்ன சொல்லி
என்ன ?
எரிக்கும்  மயானத்தில்
இருக்கும் ..
வேகுந்தலம் புகுந்தது -காளிதாசன்
சாகுந்தலம் !

என்
எமபுரத்தில் கூவித்திரி என்று -
கூற்றுவன் அழைக்க-அந்தோ
அவன்
கூடப்போனாள் சாவித்திரி ;

தென்மதுரையில் கண்மலர்ந்து 
வட மதுரைக் கண்ணனிடம் 
மீண்டும் போய்ச் சேர்ந்தாள்-
மீரா!

பாட்டூர்புரம்-எனும் 
பதிமதுரை தோன்றிக் -கடைசியில் 
கோட்டூர்புரம் போந்த 
கோகிலத்திற்கு ..

மாங்குயிலும் பூங்குயிலும் 
மண்மிசை ஆகுமோ நேரா ?

தீ 
தின்றது ..
சங்கீத வாணியின் 
சரீரத்தை தான்;அது 
சாப்பிடப் போமோ -அவரது 
சாரீரத்தை ?

குறுந்தகடுகளில்;நாடாக்களில்-
குடியிருப்பார்..


எம்.எஸ்
என்றும் சாகாது;
கடல்-வெயிலடித்துக்
காய்ந்து போகாது ! 

                                                                                    நன்றி ;குமுதம் ரிப்போர்ட்டர் 

1 comment:

  1. எல்லோர்க்கும் இருந்தென்ன ?
    எமனுக்கு இல்லையே ஏழிசை ஞானம்!

    ReplyDelete

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது

பிரபலமான பதிவுகள்